சிறைச்சாலைகளில் போதைப்பொருள்...தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவல் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்களில் புழக்கத்தில் இருந்துவந்த போதைப் பொருட்களின் நடமாட்டம் தற்போது சிறைச்சாலைகளுக்குள்ளேயும் புகுந்துவிட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;குற்றவாளிகளை சிறையில் அடைத்து, எதிர்காலத்தில் குற்றம் இழைக்காத வண்ணம் சீர்திருத்தி, அவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கும் புனிதமானப் பணியை சிறைத் துறை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சிறைத் துறையை போதைத் துறையாக மாற்றிய பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. 

இதற்குக் காரணம் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவல் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்களில் புழக்கத்தில் இருந்துவந்த போதைப் பொருட்களின் நடமாட்டம் தற்போது சிறைச்சாலைகளுக்குள்ளேயும் புகுந்துவிட்டதாகவும், சிறைச்சாலைகளுக்குள்ளேயே கைபேசி மூலம் பேச வேண்டியவர்களுடன் பேசி எதிரிகளை தீர்ந்துக்கட்ட திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் தகவங்கள் வருகின்றன.

அண்மையில், பூந்தமல்லி சிறையில் கைதிகள் அறைகளிலிருந்து ஸ்மார்ட் போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதையடுத்து துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டியவர்களே குற்றங்களுக்கு துணைபோவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இதன் காரணமாகத்தான், குற்றவாளிகளை கண்டு காவல் துறையினர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து காவல் துறையினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க அரசுக்கு இருக்கிறது.

எனவே முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, சிறைச்சாலைகளில் நிலவும் போதைப் பொருட்கள் புழக்கம், கைபேசி மூலம் வெளியாட்களுடன் பேசி கொலைவெறித் தாக்குதல்களுக்கு திட்டமிடுதல், அரசு அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் உள்ள நெருக்கம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தி சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drugs in prisons O Panneerselvam slams DMK government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->