துபாயில் தீயில் கருகி பலியான தமிழக இஸ்லாமியர்கள்! தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!
Dubai Apartment accident CM Stalin Announce fund
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு இமாம் காசீம், த/பெ அப்துல் காதர் (வயது 43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த திரு.குடு (எ) முகமது ரபிக், த/பெ.சலியாகுண்டு (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Dubai Apartment accident CM Stalin Announce fund