'சைபர்' குற்றவாளியின் தொடர் மிரட்டல்; கையை அறுத்து தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி..!
Elderly couple commits suicide due to continuous threats from cyber criminals
கர்நாடகாவில், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்து, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், கானாபூர் தாலுகாவை சேர்ந்த வயதான தம்பதி சான்டன் நசரேத், 82, பிளாவியா, 79. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இவர்கள் இருவரும் வீட்டில் நேற்று கத்தியால் கையை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணையை தொடங்கினர். இதில் வயதான தம்பதிகளாக கணவன், மனைவி இருவரும் கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இறப்பதற்கு முன் அவர்கள் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன்படி, சில நாட்களுக்கு முன்பு, வயதான தம்பதிக்கு மொபைல் போனில் பேசிய நபர், தன்னை டில்லியில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி சுமித் பிராரி என, அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
அத்துடன், தம்பதியின் மொபைல் போன் எண்ணிலிருந்து சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளதாக மிரட்டியுள்ளார். இதனால், தம்பதி பயந்துள்ளனர். இச்சமயத்தில் அனில் யாதவ் எனும் மற்றொரு நபர் தொடர்பு கொண்டு, இதே விஷயத்தை பற்றி கூறி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால், அச்சத்தில் இருந்த தம்பதிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து, பெலகாவி எஸ்.பி., பீமா சங்கர் கூறுகையில், ''வயதான தம்பதியிடம், சைபர் குற்றவாளிகள் மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்து இருக்கலாம்,'' என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
English Summary
Elderly couple commits suicide due to continuous threats from cyber criminals