ஜீன் வரை வெப்ப அலை தாக்கம்; வெளியில் செல்வதை தவிர்க்கவும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Heat wave impact till June Meteorological Department warns
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும், வெப்ப அலை வீசலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை, பெரும்பாலான மண்டலங்களில் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூ்ன் வரை 04 முதல் 07 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது, வட மற்றும் கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில், வழக்கத்தை காட்டிலும் இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் கூடுதலாக ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பகல் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை குறைக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாடு அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலை நாட்களை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இந்த கோடை காலத்தில் 09 முதல் 10 சதவிகிதம் வரையிலான கூடுதல் மின்சார தேவை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Heat wave impact till June Meteorological Department warns