அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து மற்றும் வங்கி கணக்கு முடக்கம் - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை இவர் வீட்டில் சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. 

அந்த ஆவணங்களின் அடிப்படையில், விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை ரூ.206.42 கோடி வரி விதித்தது. ஆனால், இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தவில்லை. அதன் பின்னர் வருமான வரித்துறையினர், அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், நான்கு வங்கி கணக்குகளை முடக்கினர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''நான் விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எம்.எல்.ஏ.-க்குரிய ஊதியம் மற்றும் தொகுதி மேம்பாட்டுக்குரிய நிதியை பெறும் எனது வங்கிக் கணக்கை வருமானவரித்துறையினர் முடக்கி விட்டனர்.

இதனால், தொகுதியில் செயல்படுத்தும் நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை. எனவே, வங்கிக் கணக்குகள் மற்றும் நிலத்தை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும்'' என்று அவர் தெரிவித்திருந்தார். 

அதன் பின்னர் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை வரிவசூல் அதிகாரியான குமார் தீபக் ராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:- 

"முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த 2011-12 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வருமான வரியை செலுத்தும் வேண்டும் என்று உத்தரவிட்டும் செலுத்தவில்லை. 

முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் ஒரு வங்கி கணக்கில் மட்டும் கடந்த 2022-23-ம் நிதியாண்டுக்கு தமிழ்நாடு அரசு ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்து 226-ஐ செலுத்தியுள்ளது. ஆனால், அந்த கணக்கில் இருந்து தொகுதியாக எந்த பணமும் எடுக்காமல் அவருடைய சொந்த செலவுக்காக மட்டும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் சோதனையின்போது எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால் சட்டப்படி அவருடைய சொத்துக்கள் மற்றும் வங்கி முடக்கப்பட்டுள்ளது. 

மேலும், வருமானவரியின் மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியாக உள்ள தொகையில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், அதையும் அவர் செலுத்தவில்லை. இதற்காக தான் அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. 

ஒரே நேரத்தில் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கு  மனுதாரர் முயற்சி செய்து வருகிறார்.

ஆகவே, வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"  என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த பதில் மனுவுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிப்பதற்கு அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ex minister vijayabaskar bank account close income tax department answer


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->