பல்லடத்தில் சோகம்: பழைய பனியன் கழிவு குடோனில் தீ.. 12 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது..!!
Fire Accident in Old Baniyan Waste Godown in Palladam Near Tirupur
திருப்பூரில் பல்லடம் அருகே உள்ள ஒரு பழைய பனியன் கழிவு குடோனில் இன்று அதிகாலை தீ பற்றியுள்ளது. தொடர்ந்து 12 மணி நேரம் போராடி அந்த தீயை இன்று பிற்பகல் 3 மணிக்கு தீயணைப்புத் துறையினர் அணைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் கார்த்திக் என்பவர் பழைய பனியன் துணிகளை சேகரித்து வைக்கும் கிடங்கு ஒன்றை வாடகைக்கு இடம் எடுத்து வைத்துள்ளார். கார்த்திக்கின் குடோனுக்கு அருகிலேயே இப்ராஹிம் என்பவரது ஆலை ஒன்று உள்ளது.
இந்த ஆலையில் இப்ராஹிம் பழைய பஞ்சுக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்து நூலாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 12) அதிகாலை இப்ராஹிமின் நூல் தயாரிக்கும் ஆலையில் தீ பிடித்துள்ளது. அங்கிருந்து வேகமாக பரவிய தீ, அருகில் இருந்த கார்த்திக்கின் குடோனில் ஜன்னல் வழியாகப் பரவியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தீயை அணைக்கப் போராடியுள்ளனர். இந்த தீவிபத்தில் குடோனின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்துள்ளதால் தீயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் இருந்து 12 மணி நேரம் போராடி இன்று பிற்பகல் 3 மணிக்கு தீயை அணைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்ராஹிமின் நூல் தயாரிக்கும் ஆலையில் போதுமான வசதிகள் இல்லாததே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English Summary
Fire Accident in Old Baniyan Waste Godown in Palladam Near Tirupur