இன்று வெள்ள அபாய எச்சரிக்கை!...பொதுப்பணித்துறை அறிவிப்பு!
Flood alert today public works announcement
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து 184 கன அடி நீர் அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.
மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மஞ்சளாற்று கரையோரம் உள்ள பொது மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.25 அடியாக உள்ளது. அணைக்கு 570 கன அடி நீர் வருவதால், அணையில் இருந்து 1511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3888 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கும்பக்கரை, சோத்துப்பாறை, கல்லாறு உள்ளிட்ட வனப்பகுதி பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்தது.
இதே போல், சின்னமனூர், பாளையம், கோம்பை, கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
English Summary
Flood alert today public works announcement