#காஞ்சிபுரம் :: தொடர் கன மழை எதிரொலி..!! திருமுக்கூடல் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு..!!
Flooding in Thirumukoodal dam due to continuous heavy rains
மாண்டஸ் புயல் கரை கடந்த பிறகும் தமிழகத்தின் மேல் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு நாட்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் பாலாறு, செய்யாறு, வேதவதியாறு ஒன்றாக சங்கமிக்கும் பகுதியான திருமுக்கூடலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையச்சிவரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இந்த தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 10,000 முதல் 15,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பொதுமக்கள் பாலாற்றில் துணி துவைத்தல், குளித்தல், செல்போன்களில் புகைப்படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 430 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏரி பகுதிகளுக்கும் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Flooding in Thirumukoodal dam due to continuous heavy rains