பிரான்ஸ் நாட்டு பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி.. புரட்சி இயக்குனர் கோபி நயினார் பரபரப்பு புகார்..!!
French woman filed a money fraud complaint against director Gopi Nayanar
அறம் பட இயக்குனரும், விசிக பிரமுகருமான கோபி நயினார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டு இலங்கை பெண் சியாமளா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தமிழ்நாட்டில் திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டேன். கடந்த 2018ஆம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது. அவர் தமிழில் படங்களை தயாரிக்கலாம் என்றும், அதற்கு அவர் உதவுவதாகவும் தெரிவித்தார். நான் நல்ல இயக்குனர் இருந்தால்தான் நான் பணம் கொடுப்பேன் என கூறினேன்.
அப்போது இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் கருப்பர் நகரம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்தில் இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம். விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என தெரிவித்தார். இயக்குனர் கோபி நயினாரின் வாக்குறுதியை நம்பி பணம் கொடுத்தேன். கடந்த 2018ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன்.
ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன். பின்னர் திரைப்படத்திற்கான பூஜை தொடர்ந்து மூன்று நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஜெய்யை வைத்து கோபி நயினார் படத்தை இயக்கினார். படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு நானும் சென்று பார்த்தேன். படத்தை ஆறு மாதத்தில் முடித்துவிட்டு வெளியிடலாம் எனவும், படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர்.
அதன் பிறகு நான் பிரான்ஸ் சென்றுவிட்டேன். அதன் பிறகு 25 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளேன் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சில நாட்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் கேட்டபோது படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது சில பிரச்சனைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
அதன் பின் விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குனர் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டனர், பணத்தையும் திருப்பித் தரவில்லை. கொரோனா முடிந்து அண்மையில் சென்னைக்கு வந்த பிறகு விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினாரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்களை சந்திக்க முடியவில்லை.
இதன் காரணமாக இன்று தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குனர் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். தமிழக முதலமைச்சரும், காவல்துறையினரும் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
French woman filed a money fraud complaint against director Gopi Nayanar