ஆருத்ரா வழக்கு.."ஹரிஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம்".. சிக்கப்போகும் பாஜக நிர்வாகிகள்..!!
Harris confession in Arudhra case implicate many BJP leaders
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் ராஜ், பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அனைவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள நிலையில் அவர்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மைக்கேல் ராஜ் பல திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் அனைத்து கிளைகளின் வங்கி கணக்குகளையும் தான் கையாண்டதாகவும் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற சுமார் 1,749 கோடி ரூபாயை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்ததாக மைக்கேல் ராஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
மேலும் முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தில் மைக்கேல் ராஜ் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை குவித்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. மோசடியில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் வெளிநாடுகளில் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்பது குறித்தும் மைக்கேல் ராஜிடம் இருந்து போலீசார் வாக்கு மூலமாக பெற்றுள்ளனர். மேலும் ரூ. 1,749 கோடி பணத்தை எந்தெந்த வங்கி கணக்கிற்கு அவர் பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பது குறித்தான பட்டியலை போலீசார்தயாரித்து வருகின்றனர்.
மைக்கேல் ராஜ் அளித்த தகவல் குளித்து விசாரணை நடத்த உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரும் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளரான ஹரீஸிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பாஜக நிர்வாகி அரசிடம் மேற்கொண்ட விசாரணையில் முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் 130 கோடி ரூபாயை பாஜக கட்சியில் பதவி வாங்குவதற்காக பாஜக நிர்வாகிகளான அலெக்ஸ் மற்றும் சுதாகர் ஆகியோரிடம் கொடுத்ததாக ஹரீஸ் பகீர் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனை அடுத்து பாஜக நிர்வாகிகளான அலெக்ஸ் மற்றும் சுதாகர் ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று ஆஜராகினர்.
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதேபோன்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக மாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல பாஜக நிர்வாகிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வருவதால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதன் மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க வந்தனர். ஆனால் அங்கிருந்த மாநில நிர்வாகி கேசவ விநாயகம் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்டோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
English Summary
Harris confession in Arudhra case implicate many BJP leaders