அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம் - இபிஎஸ்சின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்.!
health minister subramanian explain treatment in torch light issue
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வெளியான தகவலையடுத்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விடியா திமுக ஆட்சியில் முதல்வரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்; அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்.
மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத விடியா திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க் கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.
எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது.
உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
health minister subramanian explain treatment in torch light issue