ஒசூர் அருகே 5 ஏக்கர் சின்ன வெங்காயம் பயிர் செய்த விவசாயிகள்: வியாபாரிகள் முன் வராததால் ரூ.35 லட்சம் நஷ்டம்!
hosur Onion farmers loss
ஒசூர் அருகே 5 ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராததால் சின்ன வெங்காயம் பயிர் செய்த விவசாயிகளுக்கு ரூ.35 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அனில்குமார். இவர் ஒரு பி.காம் பட்டதாரி. இவர் ஐந்து ஏக்கரில் சின்ன வெங்காயத்தைப் பயிர் செய்தார்.
இந்த நிலையில், அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்து வியாபாரிகள் விலைக்கு வாங்க வராததால் 700 மூட்டை சின்ன வெங்காயத்தை அவரது நிலத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டியுள்ளார்.
50 கிலோ சின்ன வெங்காயம் 5000 முதல் 8000 வரை விற்பனை ஆகி வந்த நிலையில், தற்போது வியாபாரிகள் 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விலைக்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், இதுவும் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராத காரணத்தால், ஐந்து ஏக்கர் பயிர் செய்த விவசாயிகளுக்கு ரூ.35 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்த பகுதிக்குத் தமிழக அரசின் வேளாண் துறை தேவையான காய்கறி சேமிப்பு கிடங்குகளை அதிக அளவில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த பகுதியில் தக்காளி அதிகம் பயிரிடப்படுவதால், தக்காளியைச் சேமிப்பதற்கு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.