4 ஆண்டுகள் கடந்தும் முடியாத பணி..மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் இல்லாதததால் விவசாயிகள் பாதிப்பு!
Impossible work for 4 years. Lack of water in Madurantakam lake affects farmers
மதுராந்தகம் ஏரியில் நான்கு ஆண்டுகள் கடந்தும் முடியாத பணியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியும் ஒன்றாகும். பொன்னியின் செல்வன் என போற்றப்படும் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரர் மதுராந்தகன் எனப்படும் உத்தம சோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 2908 ஏக்கர். இதில் 2231 ஏக்கர் நீர் தேக்க பகுதியாக உள்ளது. ஏரியின் கொள்ளளவு 694 மில்லியன் கனஅடி. கடந்த 1798 ல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அப்போதைய கலெக்டர் லியோனல் பிளேஸால் மூலம் ஏரி புனரமைக்கப்பட்டது.
மதுராந்தகம் ஏரியில் தேக்கிவைக்கப்படும் நீரால் கடப்பேரி, கத்திரிச்சேரி உள்பட 36 கிராமங்களில் 2853 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அருங்குணம், மாரிபுத்தூர், திருவாரூர், நெசப்பாக்கம், கடுக்கப்பட்டு பெரிய ஏரி, நெல்வாய்பாளையம், மேல்பட்டு, மலையம்பாக்கம், பொன்னேரி தாங்கல் உள்ளிட்ட 30 ஏரிகள் நிரம்பி 4000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
மதுராந்தகம் ஏரியில் தேங்கிய மண்ணால் நீரின் கொள்ளளவு குறைந்து போனதால் மழைக்காலத்தில் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும் ஏரி கோடைகாலத்தில் வறண்டு பாலையாக காட்சி அளிக்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏரியின் முழுக் கொள்ளளவை மீட்டு எடுப்பதோடு, தேங்கிய மண்ணை அகற்றினால் 791 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும் என்பதால் ஏரியில் மராமத்து பணி மேற்கொள்ள கடந்த 2021 பிப்ரவரியில் ரூ 120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 24 மாதங்களில் அதாவது 2023 மே மாதத்திற்குள் பணியினை முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் வருடங்கள் 4 ஆன பின்பும் ஏரியின் மராமத்து பணிகள் இன்னும் இழுத்துக்கொண்டே செல்கிறது. ஆமை வேகத்தில் நடைபெறும் இப்பணிகள் இன்னும் இரண்டு ஆண்டு ஆனாலும் முடிவடையாது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட பணி தாமதத்தால் ஏரியில் நீர்தேக்கமுடியாததால் பல்லாயிரகணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு விவசாயமும் கேள்விகுறியாகி உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாய் இப்பகுதியில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
நடைபெறும் பணிகள் முடிந்தால் பாசன பரப்பு வெகுவாய் அதிகரிக்கும் என்ற நிலையில் தற்போது ஏற்கனவே விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள் நீரின்றி கருவேல மரக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் குடிநீருக்கும் தத்தளிக்கும் இவர்களது பிரச்னையினை தீர்க்கும் வகையில் ஏரியின் மராமத்து பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். மேலும் பணி தாமதத்தால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Impossible work for 4 years. Lack of water in Madurantakam lake affects farmers