திடீர் திருப்பம்! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு பணியிட மாற்றம்! திமுக புள்ளிகளுக்கு நிம்மதி!
Justice Anand Venkatesh transferred MaduraiHC
கடந்த ஜூலை மாதம் முதல் எம்.பி/எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழமை விசாரணை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை தானாக முன்வந்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதுவரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் அடங்குவார்.
இவர்களில் அமைச்சர் பொன்முடி, தனக்கு எதிராக தானாக முன்வந்து தொடரப்பட்ட மறுசீராய்வு மீதான விசாரணைகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலக வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதை ஏற்ற மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அடுத்த விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக முன்னாள் அமைச்சர்கள் 6 பேரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை எதிர்த்து, தானாக முன்வந்து தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை இனி தொடர மாட்டார்.
அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளதால் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோரின் அமர்வு அடுத்த 3 மாதங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அமர்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நீதிபதிகளில் நீதிபதி வெங்கடேஷும் இடம்பெற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு நீதிபதிகளுக்கான இலாகா ஒதுக்கீட்டை மாற்றுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Justice Anand Venkatesh transferred MaduraiHC