பல் பிடுங்கி பல்வீர் சிங் வழக்கு.!! தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
MaduraiHC orders TNGovt to respond in Balveer Singh case
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண் காணிப்பாளராக இருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறு வழக்குகளில் சிக்கி கைதாகும் நபர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்குக்கு எதிராக குரல் கொடுத்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட பலர் தாங்கள் அனுபவித்த சித்திரவதை குறித்து வீடியோ வெளியிட்ட நிலையில் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து பல்வீர் சிங் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலர்கள் சக்தி நடராஜன், சந்தனகுமார், மணிகண்டன், ராஜகுமாரி, பெருமாள், சந்திரசேகர், ராஜ்குமார், போகபூபன் உள்ளிட்டோரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கு தொடர்பான குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உயிர்மட்ட குழுவின் அறிக்கை மனுதாரர்களுக்கு தருவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
MaduraiHC orders TNGovt to respond in Balveer Singh case