பதற வைத்த ரயில் நிலைய கொலை சம்பவம் - 5 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்.!
man arrested for putlur murder case
திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் துளசி தியேட்டர் அருகே வசித்து வருபவர்கள் கார்த்திக் - இந்திரா தம்பதியினர். ரயிலில் பாசிமணி உள்ளிட்டப் பொருட்களை விற்பனை செய்து வரும் இவர்கள் நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு புட்லூர் ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் தங்கி உணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது இவருக்கும் அதே ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த தமிழரசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தமிழரசன் அருகில் இருந்த பாட்டிலை உடைத்து கார்த்திக் கழுத்தை அறுத்து விட்டு தனது மனைவியுடன் அந்த வழியாக ரயிலில் ஏறி தப்பித்துச் சென்றார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இந்திரா உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இருப்பினும் கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய தமிழரசன் மற்றும் அவரது மனைவியை செவ்வாய் பேட்டை ரயில் நிலையத்தில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் எண்ணூர் கத்திவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், போதையில் கார்த்திக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை ரயில்வே போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for putlur murder case