பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் கே.என்.நேரு.!
Minister Nehru inspected fire accident area in perungudi
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது :
பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 9 முதல் 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு எஞ்சிய குப்பைகள் இங்கு சேகரிக்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்தக் குப்பைக் கொட்டும் வளாகத்தில் உள்ள திடக்கழிவுகள் தற்பொழுது பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்.
நேற்று மதியம் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் நேற்று முதல் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்புத் துறையின் சார்பில் 12 வாகனங்கள், 2 ஸ்கை லிஃப்ட் வாகனங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 120க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்பொழுது, தீயின் காரணமாக புகை மூட்டம் காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் தரமணி ஆகிய 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப இம்மருத்துவ முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மேயர் திருமதி ஆர்.பிரியா தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் திரு.பி.கே.ரவி, ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி மற்றும் உயர் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Minister Nehru inspected fire accident area in perungudi