பேருந்து படிக்கட்டில் தொங்கி தவறி விழுந்த மாணவன்! அமைச்சர் சிவசங்கரின் விநோத விளக்கம்!   - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தில், படிக்கட்டில் தொங்கி கொண்டிருந்த பள்ளி மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்து காயமடைந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். இதேபோன்று நேற்று மதுரையில் ஒரு மாணவன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்த நிலையில், இன்று மாணவன் காயமடைந்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார். 

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தன்னுடைய பதிவில் தெரிவித்திருப்பதாவது, "மேல்மருவத்தூர் அருகே, இன்று அரசுப் போக்குவரத்து கழக பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழும் காட்சி பதற வைக்கிறது. அந்தப் பேருந்து அச்சரப்பாக்கம்  - செய்யூர் இடையே இயக்கப்படுவது. இன்று மேல்மருவத்தூரில் 106 பெண்கள் ஏறியுள்ளனர். 33 மாணவர்கள், 24 ஆண்கள் பயணம் செய்துள்ளனர். பெண் பயணிகள் திடீரென அதிகமானதால், மாணவர்கள் உள்ளே செல்லாமல் படிக்கட்டில் பயணித்துள்ளனர். நடத்துனரும், ஓட்டுநரும் மாணவர்களை உள்ளே வர சொல்லி அழைத்தும் ஏறவில்லை. அப்போது தான் அந்த மாணவர் கை நழுவி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக தப்பினார் அந்த மாணவர். 

பெண்கள் அதிகமாக வந்தது எதிர்பாராதது. இல்லை என்றால், எப்போதும் போல் மாணவர்கள் பயணம் செய்ய அந்த பேருந்தே போதுமானது. மாணவர்கள் பேருந்தினுள் சென்றிருந்தால் விபத்து நேரிட்டிருக்காது. நேற்று தான், மதுரையில் 9ஆம் வகுப்பு மாணவன் பிரபாகரன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கலங்கச் செய்யும் சம்பவம் நடந்தேறியது. இன்று இந்த சம்பவம்.

மதுரையில் "படியில் பயணம் செய்யமாட்டோம்" என்று மாணவர்களை உறுதி மொழி ஏற்க செய்யும் பணியில் காவல்துறையினர், இயக்கூர்தி துறையினர், போக்குவரத்து துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுதும் இந்தப் பணி தொடரும்.

பெற்றோர் தம் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள், தம் பெற்றோர் வீட்டில் தமக்காக காத்திருப்பர் என்பதை உணர்ந்து பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும்." என தெரிவித்திருக்கிறார். 

பெண்கள் அதிகமாக ஏறியது தான், பேருந்தில் நெரிசலுக்கு காரணம். அதன் காரணமாகவே மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி வந்ததாக அவர் கூறியிருக்கிறார். ஆனால் பலரும் அவருடைய பதிவிலேயே பல ஊர்களிலும் மாணவர்களின் நிலை இதுவாக தான் இருக்கிறது எனவும் அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

பள்ளி மாணவர்களுக்காக பள்ளி நேரத்தில் மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கலாம், அதேபோல முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அன்று சிறப்பு பேருந்துகளை மாணவர்களுக்காக விட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். 

மற்ற நேரங்களில் நகர பேருந்துகள் காலியாக சென்றாலும், பள்ளி நேரங்களில் காலை மாலை இரு வேளைகளிலுமே பணிக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் எல்லோரும் பயன்படுத்துவதால், மேலும் பயண கட்டணம் இல்லை என்பதால் மாணவர்களும் பெண்களும் மிகுதியாக பயன்படுத்துவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை.

எனவே கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தி, அந்த நேரத்திற்கு சிறப்பு பேருந்தாக வேலை நாட்களில் மட்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் அமைச்சர் நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பெரிதாக நடக்கவில்லை என்பது போலவும் தன்னுடைய விளக்கத்தை அளித்திருப்பது அவருடைய பொறுப்பினை தட்டி கழிப்பதாகவே இருக்கிறது. 

அதே நேரம் மாணவர்களும் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்து, ஓட்டுநர் நடத்துநர்களின் பேச்சினைக் கேட்டு பேருந்தின் உள்ளே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். போதிய வசதி இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் அலட்சியமும் இதுபோல சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, "அச்சரப்பாக்கம் முதல் செய்யூருக்கு 19 எண் கொண்ட இந்த ஒரே ஒரு பேருந்து மட்டுமே உள்ளது. செய்யூர் என்பது தொகுதியின் தலைநகரம். பள்ளி கல்லூரிகள் அதிகம் இல்லாத செய்யூர் பகுதியில் இருந்து அச்சரப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூருக்கு தான் அதிகம்  படிக்க செல்கின்றனர். புதிதாக பேருந்து இயக்க முடியாமல் போனாலும், பள்ளி கல்லூரி விடும் நேரங்களிலாவது சிறப்பு பேருந்து இயக்க வேண்டும், பல வருடங்களாகவே இந்த நிலை தான் இருக்கிறது ஆட்சிகள் மாறினாலும் காட்சி மாறவில்லை. அமைச்சரே நேரில் வந்து ஆய்வு செய்து தெரிந்து கொள்ளட்டுமே" என்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sivasankar give explanation about bus accident at Melmaruvathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->