விசாரணை கைதி மர்ம மரணம்.. நீதி விசாரணை தேவை..மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
Mysterious death of undertrial prisoner We need a judicial inquiry The People s Rights League
காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மர்ம மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த 10.01.2025 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி நாராயணன் (வயது 45) நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார். சிறையில் உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்துபோன நாராயணனின் உறவினர்கள் அவருக்குச் சின்ன வயது, எவ்வித நோயும் இல்லை என்பதால் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர். கடந்த 16.09.2024 அன்று சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைச் சிறைவாசியான பிரதீஷ் (வயது 23) கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பிரதீஷ் தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்காததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழு விவரங்களையும் அளிக்குமாறு டி.ஜி.பி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்திரவுப் பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் சிறைகளில் சிறைவாசிகள் மரணம் அடிக்கடி நடக்கிறது. சிறைவாசிகளைப் பாதுகாப்பதில் புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தோல்வி அடைந்துள்ளது. சிறைவாசி நாராயணன் மரணத்திற்கு புதுச்சேரி அரசும் சிறைத்துறையும் பொறுப்பு (Vicariously liable) என்பதால், அவரது குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோன சிறைவாசிகள் விவேகானந்தன், பிரதீஷ் குடும்பத்தினருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
எனவே, காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Mysterious death of undertrial prisoner We need a judicial inquiry The People s Rights League