அரியலூர் : மதுபோதையில் சாலையில் படுத்து ரகளை செய்த வடை மாஸ்டர்.!
near ariyalur tea shop employee drunk and lying on road
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் குடிபோதையில், மது பாட்டில்கள் வழக்கத்தை விட ஐந்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புலம்பி கொண்டு ஜெயங்கொண்டம் நான்கு சாலையில் ரகளை செய்துக்கொண்டு படுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட முருகானந்தத்தை சமாதானப்படுத்தி அழைத்துச்சென்று சாலையோரத்தில் அமர வைத்தனர்.
இருப்பினும், அவர் மீண்டும் சாலைக்கு ஓடிவந்து வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டு, அங்குள்ள பூக்கடையில் இருந்து பூச்சரத்தை எடுத்து வந்து, சாலையில் உதிர்த்து போட்டு மீண்டும் சாலையில் படுத்துள்ளார்.
அவரை சமாளிக்க முடியாமல் தவித்த போலீசார், மறுபடியும் மறுபடியும் அவரை சமாதானப்படுத்தி சாலையோரத்தில் அமர வைத்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் முருகானந்தத்தை பிடித்து காவல் நிலையதிற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவரது மனைவி அவரை விடுமாறு கேட்டுக்கொண்டதால், முருகானந்தத்தை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது, "இது போல் பொது இடத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். குற்றம் செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
near ariyalur tea shop employee drunk and lying on road