மதுரை : பணத்தைத் திரும்ப கேட்ட மாமாவை மண்வெட்டியால் கொல்ல முயன்ற மச்சான்.!
near madurai young man arrested attack to man
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமர்-அக்கம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அக்கம்மாளிடம் அவரது தம்பி பாலமுருகன் ரூபாய் 14,500 கடனாக வாங்கி உள்ளார்.
இந்த பணத்தை பல நாட்களாகியும் பாலமுருகன் திரும்ப தர வில்லை. இதற்கிடையே ராமர், மச்சான் பாலமுருகனை தனது மனைவியிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு அடிக்கடி கேட்டு திட்டியுள்ளார். இதனால் இருவருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ராமரும் பாலமுருகனும் சின்ன உலகாணி அருகே உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிக் கொண்டு அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது பாலமுருகன் மதுபோதையில் தனது அக்காவிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்பதற்கு நீ யார்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் படி, ராமரும் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பாலமுருகன் ராமர் பணம் கேட்டதை அவமானமாக கருதி அவர் வீட்டிற்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த ராமரை மண்வெட்டியால் கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்து சுதாரித்து கொண்ட ராமர் பாலமுருகன் வெட்டும் போது கையால் தடுத்துள்ளார். இதில் அவரது கையில் லேசான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ராமர் வலியால் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதைக்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராமரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near madurai young man arrested attack to man