பேருந்துகளில் 20 கிலோ வரை லக்கேஜே கட்டணம் கிடையாது - மாநகர போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பு..!
no luggage charge up to 20 kg in muncipal bus
மாநகர பேருந்துகளில் இருபது கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்து இருப்பதாவது:-
"மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமைக் கட்டணம் குறித்து பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்கள் பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு, சுமைக்கட்டணம் வசூலிக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பயணிகளிடம் பின்பற்ற வேண்டும்.
பயணிகள் தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்/ பைகள், கேமிரா போன்ற கையடக்கமான சாதனங்கள், லேப்டாப், சிறிய அளவிலான கையில் எடுத்து செல்லதக்க மின் சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் , கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் போன்றவை இலவசமாக ஏற்றிச்செல்ல கூடிய சுமைகளாகும்.
மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65 செ.மீ அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். பயணிகள் எடுத்துவரும் 65 செ. மீ அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுக்கு பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. பேருந்துகளில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைககளை அனுமதிக்கக் கூடாது.
சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது. பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது. செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
no luggage charge up to 20 kg in muncipal bus