திருச்சியில் வயதான திமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!!
Old DMK Volunteer tried to set himself on fire
திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த 64 வயதாகும் மூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தங்கி அங்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி ஊழியரால் பிச்சைக்காரன் என கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இருவருக்கும் இடையே அவ்வப்பொழுது பிரச்சனை நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அதே மாநகராட்சி ஊழியர் இரண்டு பிச்சைக்காரர்கள் மூலம் மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்த பணம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக தெரிய வருகிறது. இதுகுறித்து திமுக தொண்டர் மூர்த்தி திருச்சி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி ஊழியரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் மூர்த்தி மாநகராட்சி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை வேலையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு மூர்த்தி திமுக கரைவேட்டி மற்றும் தூண்டுடன் மனு கொடுப்பதற்காக குறைதீர்க்கும் கூட்டத்திற்குள் சென்று உள்ளார்.
அப்பொழுது அவர் தனது கோரிக்கையை கோஷமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்று உள்ளார். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த தீயணைப்பு துறையினர் மூர்த்தி மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். பிறகு அவரை காவல் உதவி ஆய்வாளர் மோகன் போலீஸ் வாகனத்தில் செசன்ஸ் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற மூர்த்தி மீது செசன் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு தோற்றுக் கொண்டது.
English Summary
Old DMK Volunteer tried to set himself on fire