எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இப்படி ஒரு செய்தியா - ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!
OPS Say About Toll rate increase 2023
உயர்த்தப்படவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து, விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சமுதாயத்தில் அடித்தளத்திலுள்ள ஏழை எளிய மக்கள் சிறப்புற வாழ வழி செய்யும் வகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினை அவ்வப்போது கண்காணித்து, அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற நிலையில், அதற்கு முற்றிலும் முரணாக தமிழ்நாடு அரசு தன் பங்கிற்கு பல்வேறு கட்டண உயர்வுகள் மூலம் விலைவாசி உயர்விற்கு வழிவகுப்பதும், மத்திய அரசு தன் பங்கிற்கு வரிகளை உயர்த்தி விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகை செய்வதும் மக்களை வாட்டி வதைக்கும் செயல். இந்த வரிசையில், தற்போது இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் சுட்டணத்தை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் மேற்பட்ட அங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில், 01-04-2023 முதல் சுங்கக் கட்டடத்தை 10 விழுக்காடு வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையில், இதில் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் அதன் கால அளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவைகள் மூடப்பட வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றிக்கு எல்லாம் மதிப்பளிக்காமல் தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் தன்னிச்சையாக கட்டண உயர்விற்கு பரிந்துரை செய்வது என்பது விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் செயலாகும்.
இது மட்டுமல்லாமல், 50 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சங்கச் சாவடிகள், நகர்ப் பகுதியில் இருக்கும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய அரசு ஏற்கௌயே அறிவித்தும், அதற்கான செயல்வடிவம் இன்னும் அளிக்கப்படவில்லை என்பது மக்களை அழ்ந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகின்ற அதே சமயத்தில், அதற்கேற்ப சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், சுங்கக் கட்டண உயர்வு என்பது நியாயமற்றது. சாலை பராமரிப்பின்மை காரணமாக, வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, கூடுதல் நிதிச் சுமையை மக்களுக்கு அளிக்கிறது. இதன்மூலம் இரட்டிப்பு வேதனையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சுங்கக் கட்டண உயர்வு என்பது மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் செயலாகும். இதன்மூலம் வாகன வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்படும். சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒரு சங்கிலி இணைப்பைப் போன்றது. இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 01-04-2023 முதல் உயர்த்தப்படவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்" என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
OPS Say About Toll rate increase 2023