தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் சாதிய வன்மங்களை விரைந்து முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று, புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்னசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், ”குறைத்து மதிப்பிடும் அல்லது இழிவுபடுத்தும்” நோக்கத்தில் ‘ச……ளன்’ மற்றும் பட்டியலின பிரிவில் அடங்கியிருக்கக்கூடிய எந்த ஒரு சாதியினருக்கு எதிராக பிற சாதியைச் சார்ந்தவர்கள் கடும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு பட்டியலின மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் அறிவிப்பு ஒன்றை இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
பட்டியலின பிரிவு மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோர்கள் பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களைச் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே 1989 ஆம் ஆண்டு SC&ST Atrocities Act என்னும் பட்டியல் பிரிவு மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிமுறைகள் ஆகும். இச்சட்டம் அமலாக்கப்பட்ட பிறகு, வன்கொடுமைகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஆனால், அண்மைக்காலமாக பல்வேறு தளங்களில் பலரும் பட்டியல் பிரிவு சாதிப் பெயர்களைப் பயன்படுத்தி அரசியல் வசைபாடுவது அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை எனில், இது வேறொரு மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கமும்; அதனால், அமைதியும் கெட வாய்ப்பும் ஏற்பட்டுவிடும்.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வரை ”ச.......ளன்” என்ற வார்த்தை உள்ள ஒரு பாடலை ஒரு கட்சியைச் சார்ந்த நபர் பாடிக் காட்டியுள்ளார். அது வன்கொடுமை சட்ட விதியின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டது மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாகும். எனவே அன்றே அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர் கைதும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின், இரண்டு நாட்கள் கழித்து சமூக வலைத்தளத்தில் யாரோ ஒருவர் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து, அந்த புகாரை சட்ட ரீதியாக முறையாக பதிவு செய்யாமல் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக நீதிமன்றம் அந்த குறிப்பிட்ட நபரை சிறைக்கு அனுப்பாமல் விடுவித்துவிட்டது.
அந்த நபர் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஆட்சேபனைக்குரிய சட்ட விரோதமான அதே பாடலை அதே கட்சியைச் சார்ந்த இன்னொரு நபரும் பல ஊடகங்களின் முன்பாக பாடி காண்பித்ததோடு, காவல்துறையினருக்கும், அரசுக்கும் சவால் விட்டிருந்தார். அவர்கள் இருவரும் விபரம் தெரியாமல் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை; அவர்கள் வேண்டுமென்றே தான் அதை வலிந்து சாதிய வன்மத்தோடே பயன்படுத்தியுள்ளனர். எனவே, அதன் பின்னாவது அவர்கள் இருவர் மீதும் முறையாக வழக்குப் பதிவு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை.
ஏறக்குறைய 32 வருடங்களுக்கு முன்பு ஜனதா கட்சியின் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள் மதுரை வந்தபோது அவரிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ”பிரபாகரன் ஒரு இன்டர்நேஷனல் ப………யா” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார்.
பிரபாகரனை உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனும் தொனியில் அச்சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தியதற்காகவே அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்றைய காவல்துறையும் அவரை கைது செய்வதற்கு பெரும் நடவடிக்கை எடுத்தது; அவர் உச்சநீதிமன்றம் சென்று முன் ஜாமீன் பெற்ற பின் தான் தமிழகம் வர முடிந்தது.
தற்போது ஒரு கட்சியைச் சார்ந்த இருவர் ”முன்னாள் முதல்வர் கலைஞரை சிறுமைப்படுத்துகிறோம்” என்ற பெயரில் அவர்கள் பாடிய பாடலில் உள்ள அனைத்து வார்த்தைகளுமே மிகுந்த ஆட்சேபனைக்குரியது; அதன் தொனியும் சாதிய வன்மம் கொண்டது. இதைக் கண்டும், காணாமலும் போய்விடலாம் என யார் நினைத்தாலும் அது தவறானது.
அண்மைக்காலமாக பட்டியல் பிரிவு மக்களை வார்த்தைகளால் வதைக்கின்ற செயல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவே, சாதிய மோதல்களுக்கும் வழிவகுக்கிறது.
”படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்” என்பதற்கிணங்க வாய்கிழிய மேடைகளில் கத்துவதெல்லாம் சாதி ஒழிப்பு, புரட்சி. ஆனால் செயல்களில் எல்லாம் சாதிய வன்மம், பிற்போக்குத்தனம். பொதுவெளிகளில் சமத்துவ வேஷம் பூண்டு இருக்கக்கூடியவர்கள் இதுபோன்று ஆணவத்தோடு பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளே பிஞ்சு உள்ளங்களிலும் நஞ்சாக பாய்ந்து விடுகிறது. நாங்குநேரியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு பள்ளி மாணவன் மீது இன்னொரு பள்ளி மாணவன் சாதியைச் சொல்லித்தான் கொலை வெறித் தாக்குதல் நடத்தினான் என்பது நாடறிந்தது. இன்னும் தமிழகத்தினுடைய பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்தளங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
மொழியாலும், இனத்தாலும், தேசத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய மக்கள் சாதிகளால் பிளவுபடுத்தப்படுவதும், அந்த மக்களை ஒடுக்குவதற்குச் சாதியை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதும் ஏற்புடையதல்ல. ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதாலோ, அவர்களுக்குச் சலுகைகளை வாரி வழங்குவதாலோ இந்த நாட்டில் சமத்துவமும், சமூக நீதியும் மலர்ந்து விடாது. மனித நேயமும், சம நீதியும் அடிப்படை அம்சங்களாக இருந்திட வேண்டும். சக மனிதர்களை மதிக்கத் தெரியாத ஒரு சமுதாயத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள் இருந்து என்ன பலன்? ஆறு வழிச் சாலைகளும், கோபுரங்களைப் போல் அடுக்குமாடி வீடுகளும் இருந்து என்ன பலன்? கொரோனாவை போன்று மீண்டும் தமிழ் சமுதாயத்தில் கவ்வி வரும் சாதிய ரீதியான அனைத்துவித ஒடுக்கு முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கும், இந்திய அரசியல் சாசனத்தின் மாண்பைக் காக்க வேண்டிய பொறுப்பும் பட்டியல் பிரிவு ஆணையத்திடம் இல்லை. இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட காவலர்களை கொண்ட காவல்துறையிடமும், 16 இலட்சத்திற்கும் மேற்கொண்ட ஊழியர்களைக் கொண்ட மாநில அரசு நிர்வாகத்திடமும், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலும் தான் இருக்கிறது.
இரண்டு குறிப்பிட்ட நபர்கள் பாடிய பாடல்கள் இன்னும் X-தளத்திலும், முகநூலிலும் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டு வருகின்றன. சில வார்த்தைகளை மாற்றி புதிய வடிவத்திலும் பாடல்களை உலாவ விடுகிறார்கள். இது தமிழகத்தில் வாழ்கின்ற ஏறக்குறைய 2 கோடிக்கு மேற்பட்ட பட்டியல் பிரிவில் அடங்கிய மக்களுக்கு எதிரான போராகவும்; தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பகிரங்கமாக விடப்பட்ட சவாலாகவும் கருத வேண்டியுள்ளது.
எனவே, அப்பாடல் அனைத்து தளங்களிலிருந்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். ஆட்சேபனைக்குரிய அந்தப் பாடலை பாடிக் காட்டிய அந்த இரு நபர்கள் மீதும் முறையாக வழக்குப் பதிவு செய்து, அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் வேகமாகப் பரவி வரக்கூடிய இந்த சாதிய வியாதிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை உறுதியாக இருக்கும் என கருதுகிறேன்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாக எவரும் பயன்படுத்தக்கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு, எனினும் பொதுவெளியிலோ, தனிமையிலோ ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சாதியைச்சொல்லி வசைபாடும் பொழுது அச்சட்டத்தைப் பயன்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? எனவே வார்த்தையாலோ, எழுத்தாலோ, கோபத்தின்போதோ, உடல் மொழிகளாலோ பட்டியல் பிரிவில் இருக்கும் மக்களைத் தாழ்த்தி பேசினால் கண்டிப்பாக வன்கொடுமை சட்டத்தைப் பயன்படுத்தத் தயங்கக்கூடாது.
மேலும் தமிழகத்தில் அதிகரித்துவரும் இந்த சமூக இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக காவல்துறையின் சார்பாக அனைத்து ஊடகங்களிலும் முதல் பக்கத்திலேயே விழிப்புணர்வு விளம்பரங்கள் கொடுத்திட வேண்டும். மொத்தத்தில் இனி எவரும், எங்கும் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதுபோன்று பயன்படுத்தியவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் விடக்கூடாது.
”படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்” எனும் முதுமொழிக்கேற்ப சிலர் மேடைகளில் கத்துவதெல்லாம் சாதி ஒழிப்பும், புரட்சியும்! ஆனால், செயல்களில் சாதிய வன்மமும்,பிற்போக்குத்தனமும் மேலோங்குகிறது! தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் சாதிய வன்மங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று, கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.