தனி மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்.. திமுக MLA  அனிபால் கென்னடி பேசியது என்ன? - Seithipunal
Seithipunal


தனி மாநில அந்தஸ்து கோரி தனிநபர் தீர்மானத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தன் கருத்தை வலியுறுத்திப்  பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:மாநில அந்தஸ்து குறித்து தீர்மானத்தின் மீது எனது கருத்துக்களை மாநில மக்களின் எண்ணங்களை எடுத்து வைக்க விரும்புகிறேன். மாண்புமிகு  நமது புதுவை முதல்வர் அவர்கள் பேச்சளவில் இல்லாமல் மக்கள் கோரிக்கையாக செயல் வடிவம்  முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி மாண்புமிகு மாநில முதல்வர் அவர்களே புதுச்சேரி விடுதலை திருநாளிலும் இந்திய விடுதலை திருநாளிலும் புதுச்சேரி மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அத்திருநாட்களில் கடந்த 4  ஆண்டு காலமாக அடிக்கடி முன்வைத்து வருகிறேன்.அவர் எந்த அளவிற்கு மாநில நிர்வாகியாலும் தலைமைச் செயலக அதிகாரிகளாலும் புண்பட்டிருந்தால் இந்த அளவிற்கு  தனது உரைகளில் குறிப்பிட்டிருப்பார்.அது ஒரு வரவேற்கத் தக்க அம்சமாக இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும்.

புதுச்சேரி சட்டசபையில் ஏறக்குறைய 15 முறை தீர்மானங்கள் பல்வேறு அரசுகளால்  மாநில அந்தஸ்து வேண்டி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை நமக்கான அதிகார விடுதலை இன்னும் கிடைக்கவில்லை.

புதுச்சேரி மாநிலம் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் பல நெருக்கடிகளை தற்பொழுது சந்தித்து வருகிறது.புதுச்சேரி மாநிலத்தை நிதிக் குழுவில் சேர்த்து நமக்கான வரி வருவாய் பங்கினை முறையாக உரிமையாக அளிப்பதில் கூட ஒன்றிய அரசுஇதுநாள் வரை முன்வரவில்லை.என்பது வேதனை அளிக்கக்கூடிய செயலாகும்.

மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு நமக்கு  நிதி அதிகாரமும் இல்லை.நிர்வாக அதிகாரமும் இல்லை.என்பதனை உணர்ந்து தான் மாநில முதல்வர் அவர்கள் நமது மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து ஒன்றிய அரசினை வலியுறுத்தி வருகிறார்.

கூடாநட்பு கேடாய் முடியும் என்பது போல மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பு பணியிடங்களை ஏதோ ஒன்றிய அரசு சொல்லித்தான் நிரப்புகின்றனர் போன்ற ஒரு தவறான கண்ணோட்டத்தினை மக்கள் மத்தியில் விதைக்க முயல்வது போன்ற ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் புதுச்சேரி முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் தனிக் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒன்றிய அரசின் பங்களிப்பு  மிகவும் குறைந்து வருகின்றது.தற்பொழுது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நாம் நமது மாநிலத்தின் 63% சொந்த வருவாயில் நின்று கொண்டிருக்கிறோம்.என்றும் ஒன்றிய அரசின் உதவி வெறும் 23% தான் என்று ஆணித்தனமாக கூறுயுள்ளது தற்போதைய தீர்மானத்திற்கு வலு சேர்க்கின்றது.

மேலும் தனி நபர் வருமானத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் கோவா, நாகாலந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை காட்டிலும் நாம் அதிகமாக இருக்கின்றோம் . நம்மை  விட குறைந்திருக்கின்ற மேற்கண்ட மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்று விட்டன.

தற்பொழுது அரசு பணியிடங்களான குரூப்" ஏ" மற்றும் குரூப்"பி"சான்றிதழ் பெற்ற பணியிடங்கள் மத்திய தேர்வாணயத்தின் மூலம் நிரப்பப்படுவதால்  மாநில மைந்தர்களுக்கு ஒரு சதவிகித இடங்கள் கூட கிடைப்பதில்லை. அரசிதழ் பதிவு பெறாத குரூப் "பி" பணியிடங்களில் 20% இடங்களை கட்டாயம் பிற மாநிலத்தவரைக் கொண்டு நிரப்ப சதி வலை பின்னப்படுகிறது.

மாநில தேர்வாணயம்  என்ற அமைப்பினை ஏற்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாக மாறிக் கொண்டு வரும் பேராபத்து நமது மாநிலத்தை சூழ்ந்து இருக்கின்றது.நமது மாநில அரசின் மின்துறையின் சொத்துக்களை மதிப்பீடு செய்யாமல் ஒரு ரூபாய் குத்தகை அடிப்படையில் மின் துறையினை தனியார் மயமாக்கும் முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

1954 ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசத்திலிருந்து நாம் விடுதலை பெற விடுதலைப் போராட்ட தியாகிகளின் உயிரிழப்புகளும் தியாகங்களும் வீணாகி விடுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று 17.12.1970 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக குரல் கொடுத்தவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு.புதுவை சிவம் அவர்கள் தான் .முன்னதாக 1969 ஆம் ஆண்டு அமைந்த திமுக கூட்டணியில் அமைச்சராக விளங்கிய மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் சட்டமன்றத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டுமென்று பதிவு செய்திருக்கிறார்.

தற்பொழுது திமுக எம்.பி திருச்சி சிவா அவர்கள் தமிழக முதல்வர் அவர்களின் வழிக்காட்டுதல்படி நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசி வருவதை முதல்வர் கவனத்திற்கு நினைவு கூறுகிறேன்.அது மட்டுமல்லாமல் 1980 ஆம் ஆண்டும்  1990ஆம் ஆண்டு திரு D .இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில்  நடந்த திமுக கூட்டணி அரசில் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தின் வழியே ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.

மேலும் அதற்கு ஒருபடி மேலே சென்று 1996-2000 ஆண்டில் அமைந்த திமுக கூட்டணி அரசின் முதல்வராக இருந்த திரு .ஆர் .வி.ஜானகி ராமன் அவர்கள் முன்னாள் தலைமை செயலாளர் .திரு.சாரி அவர்களின் தலைமையில் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை ஏற்று 1997 ஆம் ஆண்டு அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா அவர்களை அனைத்துக் கட்சி குழுவோடு சந்தித்து நேரடியாக முறையிட்டார்.

பின்னர் 1999 ஆம் ஆண்டின் இறுதியில் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அவர்களை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளோடு மீண்டும் சந்தித்து முறையிட்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாநில அந்தஸ்து கருத்துகளை வலுவூட்டி உள்ளதை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு புதுச்சேரி மாநில முதல்வர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் , மாண்புமிகு பாரதப்பிரதமர் ஆகியோரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கை மனுவினை நேரடியாக அளிக்க வேண்டும்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டமன்ற தீர்மானத்தோடு நில்லாமல் மற்றும் பொதுவெளியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென கூறுவதை விட்டு விட்டு  அதற்கான மேற்கண்ட முன்னெடுப்புகளை உண்மையாக மேற்கொள்ள வேண்டும் என புதுவை மாநில திமுக சார்பில் தீர்மானத்தின் மீது வலியுறுத்தி வேண்டுகோள் வைக்கிறேன்.அதற்கான முழு ஒத்துழைப்பினை நல்கி எங்களது திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்கும் பணியாற்ற காத்திருக்கிறது 4 ஆண்டு காலமாக சட்டமன்ற தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு கடத்தும் போக்கு கண்டிக்கத் தக்கது.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த வாய்பினை பயன்படுத்தி அதில் இடம் பெற வேண்டும்  என்பது தான் எங்களது எண்ணம் .உங்கள் காலத்திலாவது ஒரு விடுதலைப் பெற்ற மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் நாங்கள் எல்லாம் உங்களோடு அதில் பயணிக்க வேண்டும் .இந்த தீர்மானம் நமது உரிமைக்கான தீர்மானம் .நமது ஒற்றுமைக்கான தீர்மானம் .நமது மக்களின் உணர்வுக்கான தீர்மானம் என தெரிவித்து எனது  ஆதரவினை நல்குகின்றேன்.டெல்லி மாநகரத்திலே பாராளுமன்றம் முன்பு போராட்டம் ஆனாலும் சரி நமது சட்டப்பேரவை முன்பு போராட்டமானாலும் சரி உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்.

 இதனை தனிநபர் தீர்மானமாகப் பார்க்காமல் அரசின் தீர்மானமாக மாற்றி நமது மாநிலத்திற்கு விடுதலைப் பெற்றுத் தாருங்கள் என்று இந்த மன்றத்தின் மூலமாக கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Resolution for statehood What did DMK MLA Anibal Kennedy say


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->