#வேலூர் || குழந்தை இறந்த விவகாரம்.. ஆக்ஷனில் இறங்கிய ஆட்சியர்.. சாலை அமைக்கும் பணி தொடங்கியது.!!
Road construction work has started in Vellore hill village
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை கிராமத்தில் உள்ள அத்திமரத்து பகுதியைச் சேர்ந்த விஜி மற்றும் பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது நல்ல பாம்பு கடித்துள்ளது.
இதனை அடுத்து பெற்றோர்கள் தனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நீண்ட நேரம் நடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அக்குழந்தை பாதி வழியிலேயே உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் அமைந்துள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து குழந்தையின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்பொழுது கிராமத்திற்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டருக்கு முன்பே குழந்தையின் உடலுடன் கீழே இறக்கி விட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையின் உடலை கால்நடையாக எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்தான செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. போதுமான சாலை வசதி இருந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் சம்பந்தப்பட்ட மலை கிராமத்திற்கு சென்றபோது மலைப்பாதையில் கார் சிக்கிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து புல்லட்டில் சென்ற வேலூர் ஆட்சியர் அல்லேரி மலை அடுத்த அத்திமரத்து மலை கிராமத்தில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அல்லேரி மலைப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தார்.
இந்த நிலையில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்து இறந்த குழந்தையின் சடலத்துடன் தாய் 10 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து முதற்கட்ட ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மலை கிராமத்திற்கு சாலை அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினரின் அனுமதி கிடைக்காததால் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Road construction work has started in Vellore hill village