மீனவர்களின் பிள்ளைகளுக்கு விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
Scholarships will be given to the children of fishermen soon. Chief Minister Rangasamy
மீனவர்களின் பிள்ளைகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்தும்" என்று முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி அரசு மீன்வளத்துறையின் மாநில அரசு நிதியுதவி திட்டமான மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு மீன்பிடி வலை மற்றும் கயிறு 60% மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் இயந்திரம் பொருத்திய மற்றும் இயந்திரம் பொருத்தாத கண்ணாடி நுண்ணிழை படகு உரிமையாளர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்தது விசைப்படகு உரிமையாளர்களுக்கு கயிறு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. விசைப்படகு உரிமையாளர்கள் வேண்டுகோளின் படி முதலமைச்சரின் உத்தரவின் படி 2024-25 ஆம் ஆண்டு முதற்கட்டமாக விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மீன்பிடி வலை மற்றும் கயிறுகள் வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு விசைப்படகு உரிமையாளர்கள் கேட்ட படி 49 மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு 60 சதவீத மானிய விலையில் வலைகள் மற்றும் கயிறு வகைகள் ஒரு படகு உரிமையாளருக்கு தலா 100 கிலோ வலை மற்றும் 30 கிலோ கயிறு என ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை முதலமைச்சர் ரங்கசாமி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் வழங்கினார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூபாய் சுமார் 24.50 இலட்சமாகும்.
விழாவின் போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், "மீனவர்கள் நலனின் மீது எனது அரசு மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அறிவித்த அனைத்து திட்டங்களையும் எனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது போதுமான நிதியை ஒதுக்கி மீனவர்களுக்குரிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து காலத்தோடு செயல்படுத்தப்படும். மீனவர்களின் பிள்ளைகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் எனது அரசு விரைந்து செயல்படுத்தும்" என்று கூறினார்
மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
English Summary
Scholarships will be given to the children of fishermen soon. Chief Minister Rangasamy