மாலை நேர வகுப்புகள் கட்டாயம் கிடையாது.. மீண்டும் U-turn போட்ட பள்ளிக் கல்வித்துறை.!!
School education dept notify evening classes are not compulsory
தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு 12ம் தேதியும், 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கோடை மழையின் காரணமாக ஒரு சில கல்வி மாவட்டங்களில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏற்கனவே கோடை விடுமுறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ள நிலையில் மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் காலாண்டு பருவத் தேர்வு வரை சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவதன் காரணமாக அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இன்று காலை அறிவித்திருந்தது.
அதன்படி அனைத்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் இந்த மாலை நேர வகுப்புகள் மாலை 5 வரை, அல்லது மாலை 5.30 மணி வரை நடத்தப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பள்ளிகள் தேவைப்பட்டால் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
English Summary
School education dept notify evening classes are not compulsory