போலி சான்றிதழ் விவகாரம்..!! விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்..!! அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!!
Sekarbabu said action against those working with fake certificates
தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரையில் செய்தியாளர்கள் சந்தித்த போது போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் குறித்தான ஆதாரம் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுமார் 240 கோடி ரூபாய் வாடகை பாக்கியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை போன்றே தமிழகத்தில் உள்ள 48 பழமை வாய்ந்த கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்படும். முதலில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. திருநீர்மலை, கண்ணகி கோயில், திருக்கழுக்குன்றம் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள சில மலைக் கோயில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க உள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாடுகளில் இருந்த 10 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள 82 சிலைகள் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழகத்திலிருந்து திருடு போன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் தகுந்த ஆதாரங்களுடன் அணுகினால் அவர்களிடமே சிலைகள் ஒப்படைக்கப்படும். போலிச் சான்றிதழ் மூலம் இந்து சமய அறநிலையத் துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து தகுந்த ஆதாரங்கள் கொடுத்து புகார் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார் மீது உண்மை தன்மை அறிந்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Sekarbabu said action against those working with fake certificates