செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Senthil Balaji Bail Petition Chennai Principal Sessions Court Order
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டவுடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மற்றொரு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றமும் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கணக்கில் இருந்த உண்மையான தொகையை திருத்தி பொய்யாக புகார் அளித்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தகவல்கள் திருத்தப்பட்டுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. விவசாயம் மூலமாக கிடைக்கப்பெற்ற வருமானத்தை அமலாக்க துறையினர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் ஆவணத்தில் உள்ள தேதிகளை விசாரணை நடத்த அமலாக்க துறையினர் மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், குறிப்பிட்ட காலகட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவில் வேலைவாய்ப்பு தொடர்பாக யார் யாரிடம் எவ்வளவு தொகை பெறப்பட்டது. அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதி தனது உத்தரவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுத்த போதும் வேறு எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதால் இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுவதாக இல்லை என தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Senthil Balaji Bail Petition Chennai Principal Sessions Court Order