மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Seymour oak tree removed chennai high court order
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சீமை கருவேல மரங்களை அகற்ற, அனைத்து பஞ்சாயத்துகளையும் அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரானை செய்து, உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்பின், இந்த வழக்குகள் அனைத்தும், வனங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர் வளத்துறை சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, நீர் வளத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 'தமிழகம் முழுதும், 4.90 லட்சம் ஏக்கர் பரப்பு நீர்நிலைகளில், சீமை கருவேல மரங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.'அவற்றில், 1.75 லட்சம் ஏக்கர் பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதியை படிப்படியாக அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையில், 'கிராமப்புறங்களில், 6,750 ஏக்கரில் இருந்த சீமை கருவேல மரங்கள், 4.74 கோடி ரூபாய் செலவில் அகற்றப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர்வனத் துறை அறிக்கையில், "முதுமலை மற்றும் ஆனைமலை வனப் பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைகளை பதிவு செய்த பின், நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றாமல், மொத்தமாக அகற்ற வேண்டும்.
இதுகுறித்த டெண்டர் நடைமுறைகளை, மூன்று மாதங்களில் முடிவெடுத்து, சீமை கருவேல மரங்களை அகற்றும்படி, தமிழகம் முழுதும் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தி, அதற்காக மாதந்தோறும் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி அகற்றப்பட்ட கருவேல மரங்களை ஏலம் விட, கிராம பஞ்சாயத்துக்களுக்கு அனுமதியும் வழங்க வேண்டும். மேலும், கருவேல மரங்களை அகற்றிய இடங்களில், நாட்டு மரங்களை நட வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டநிலையில், இந்த விசாரணையை நவம்பர் 2 -ந்தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
English Summary
Seymour oak tree removed chennai high court order