சிறுவாபுரி முருகன் கோயில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி.. அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
Siruvapuri Murugan Temple Basic Amenities for Devotees District Collector holds consultation with officials of all departments
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழி நெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொன்னேரி வட்டம், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிற துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழி நெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதை கருத்தில்கொண்டு கூடுதலாக நிழற்பந்தலுடன் தடுப்பு வரிசைகள்(Barry Guard) அமைத்து தரவும் பக்தர்கள் எளிதில் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் ’ஆங்காங்கே வைத்திடவும், பக்தர்களுக்கு உடனுக்குடன் காவல்துறை ’மூலம் அறிவிப்புகள் வழங்கிட பொது முகவரி அமைப்பு ஏற்படுத்திடவும், மேலும், திருக்கோயில் உட்புறம் நெய் தீப விளக்கு ஏற்றுவதை தவிர்த்து திருக்கோயில் நிர்வாகத்தால் திருக்கோயிலுக்கு வெளியே அதற்கென ஒதுக்கீடு செய்யப்படும் விளக்கு மண்டபத்தில் தீபம் ஏற்றிடவும், அங்கு தீயணைப்பு துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கிடவும், திருக்கோயில் உள் பகுதியில் பக்தர்கள் கொண்டு வரும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்குவதை தவிர்த்து அதற்கு காவல்துறையால் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் வழங்கிடவும் அதற்கு உரிய சான்றுகள் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உரிய அனுமதி பெற்றிட வேண்டும்.
மேலும், திருக்கோயிலுக்கு முன்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியோர்கள் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றிடவும், உள்ளாட்சிதுறை மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் தற்காலிக கழிவறைகள், வசதிகள் ஏற்படுத்திடவும், தீயணைப்பு வாகனங்கள் இரண்டு தயார் நிலையில் இருந்திடவும், இரண்டு மருத்துவ மையங்கள் கூடுதலாக இயங்கிடவும், கூடுதலாக வாகனங்கள் நிறுத்துவதற்கான (PARKING) வசதி செய்திடவும், சாலைகளில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், தேவையான அளவிற்கு குடிநீர் வசதி ஏற்படுத்திடும் வகையில் சின்டெக்ஸ் வைத்திட கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. முக்கிய குறிப்பாக திருக்கோயில் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி திருக்கோயில் சன்னதி இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும் என பக்தர்கள் அறியும் வகையில் அறிவிப்பு செய்திடும் வகையில் அறிவிப்பு பலகை மற்றும் விளம்பரம் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் தி. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், பொன்னேரி கோட்டாட்சியர் கனிமொழி, கோட்டபொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) சிற்றரசு,உதவி இயக்குநர் ஊராட்சிகள் யுவராஜ், திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் உதவி ஆணையர். மு.சிவஞானம், காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி, வட்டாட்சியர் பொன்னேரி டி.ஆர். சோமசுந்தரம், திருக்கோயில் செயல் அலுவலர் மா. மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Siruvapuri Murugan Temple Basic Amenities for Devotees District Collector holds consultation with officials of all departments