காஷ்மீருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை...! தமிழக சுற்றுலா பயணிகள் மற்றும் புனித யாத்ரீகர்கள் குஷி!
souther railway inform New Amrit Bharat train service to Kashmir Tamil Nadu tourists and pilgrims are happy
காஷ்மீர் சுற்றுலா செல்வதற்கும், ஆன்மிக யாத்திரை செல்வதற்கும் தமிழகத்தை சேர்ந்த மக்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் அதற்கு நேரடியான ரயில் சேவை இதுவரை இருந்ததில்லை. காஷ்மீர் செல்ல விரும்புவோர், விமானம் அல்லது சாலை மூலமாக மட்டுமே செல்ல வேண்டிஇருந்தது.
அதனால் பயணிகள் நலன் கருதி, தெற்கு ரயில்வே தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடியாக செல்ல 'அம்ரித் பாரத் ரயில்' இயக்க திட்டமிட்டுள்ளது.இதன் சிறப்பம்சங்களை இனி காண்போம்.

1. இந்த புதிய ரயில் கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை இணைக்க உள்ளது.
2. இந்த புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்,4000 கி.மீ தூரம் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் இரண்டு முனைகளிலும் தொழில்நுட்ப வசதியுடன் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
3. இந்த ரயிலை மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயிலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
4.உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் பாதை திட்டத்தின் கடைசி கட்டமான 111 கி.மீ நீள பாதை, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் புதிய போக்குவரத்து வசதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள்:
இந்தத் திட்டம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது,"கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீநகர் பாரமுல்லாவிற்கு ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 'வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்' சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த பாதை விரைவில் இயக்கத்திற்கு திறக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.தற்போது, கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் 3,785 கி.மீ தூரத்தைக் கடந்து, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பயணம் செய்ய முடிகிறது
. இதில் அம்ரித் பாரத் ரயிலும் இயக்கப்பட்டால் நேரடியாக ஸ்ரீநகர் சென்று சேர பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தனர். மேலும் இதில் பாதுகாப்பு குறித்து பல விஷயங்களை திட்டத்தில் சேர்க்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
English Summary
souther railway inform New Amrit Bharat train service to Kashmir Tamil Nadu tourists and pilgrims are happy