தொடர் விடுமுறை - தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!
special buses run in tamilnadu for continues holiday
வருகிற 11-ந்தேதி ஆயுத பூஜை என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறையாகும். மறுநாள் சனிக்கிழமை விஜயதசமியும், 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்று மொத்தம் 3 நாட்கள் விடுமுறை உள்ளது.
இதனால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து நாளையும், மறுநாள் வியாழக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கம் பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் மேற்கொள்வதால் அன்று 2000 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளதாவது:- ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாளை பயணத்திற்கு 13 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 10-ந் தேதி பயணம் செய்ய மொத்தம் 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
364 அரசு விரைவு பேருந்துகளுக்கும் 40 பிற போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் முன்பதிவு நடக்கிறது. நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
special buses run in tamilnadu for continues holiday