அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருக்கிறது.
எனவே, மிகப்பெரிய அளவில் தொற்றின் அச்சம் உலகளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் தினசரி தொற்றின் எண்ணிக்கை 10,000 தொடங்கி 1 இலட்சம் வரை சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
தமிழகத்தை பொறுத்தவரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகச்சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், தடுப்பூசி போடும் பணி, கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் போன்ற பணிகளில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறார்.
நேற்றைக்கு ஐஐடி வளாகத்தில் 3 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றவுடன் சுகாதாரச் செயலாளர் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும், அங்குள்ள குடியிருப்புகளை சார்ந்தவர்களுக்கும் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் ஐஐடியில் உள்ள 16 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த வளாகத்திலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றின் பாதிப்பை பொறுத்தவரை இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களில் சிவில் நடவடிக்கைகளுக்காக சென்னை வந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் குழு குழுவாக வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் விவரங்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில், அந்தத் தொழிலாளர்களுக்கு இலவச RT-PCR பரிசோதனை செய்யப்படும். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியும் செலுத்தப்படும்.
வட மாநிலங்களான டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை பெருகி வருவதால், அங்கிருந்து வருபவர்கள் மூலம் தொற்று பரவி விடக் கூடாது என்கின்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, வடமாநிலங்களில் இருந்து தொழில் புரிய வரும் தொழிலாளர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் எவ்வளவு நபர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொற்றின் பாதிப்பு மற்றவர்களுக்கு பரவாமலும் தடுக்க முடியும். மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த நடவடிக்கைகளில் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21 நபர்கள் வரை இறங்கி வந்து, கொரோனா முடிந்து விட்டது என நினைத்த நிலையில், தற்போது 39 வரை வந்துள்ளது.
எனவே, இந்நிலையில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 92.41%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 77.69%. இருந்தாலும் கூட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1,46,33,271 நபர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 54,32,674 நபர்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்து தொடர்ந்து தினந்தோறும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்றாலும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தொடக்கத்தில் 20 இலட்சம், 30 இலட்சம் என்கின்ற அளவில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்றது.
கடைசியாக 25 மற்றும் 26 போன்ற மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் குறைவாக வந்தது. எனவே, இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 54,32,674 நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1,46,33,271 நபர்கள் என மொத்தம் 2 கோடி நபர்களை கருத்தில் கொண்டு வருகின்ற மே மாதம் 8ம் தேதி தமிழகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக மெகா முகாம் என்று சொல்வதைக் காட்டிலும், சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் 1 லட்சம் இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
40 முதல் 50 ஆயிரம் இடங்களில் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் இருந்தாலும் கூட நடத்தப்படுவது என்பது காலையில் ஒரு இடம், மாலையில் ஒரு இடம் என தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2 கோடி நபர்கள் எந்தப் பகுதியில் அடர்த்தியாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அந்தப் பகுதிகளுக்கு தடுப்பூசி முகாமினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 1 இலட்சம் சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் வருகின்ற மே மாதம் 8ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒவ்வொரு பகுதிகளிலும் எங்கெங்கே இந்த முகாம்கள் நடத்தப்படும் என்கின்ற விவரங்கள் சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர்களால் முன்கூட்டியே 1 மற்றும் 2ம் தேதிகளில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து 8ம் தேதி நடைபெற உள்ள முகாம்கள் அவர்கள் பகுதிகளில் எங்கு முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.