மின்னுற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்.!! - Seithipunal
Seithipunal


அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்,குழந்தைகள் அவதி: மின்னுற்பத்தியை  பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியீட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது :-

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களைத் தவிர்த்து,  மீதமுள்ள மாவட்டங்களில்  தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் மக்களுக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்,  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர்,  பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்,  ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில் தினமும் ஒரு  மணி  நேரம் முதல் 4 மணி நேரம்  வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



அறிவிக்கப்படாத மின்வெட்டு ஒருபுறம்  இருக்க, இன்னொருபுறம்  மின் அழுத்தக் குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின் விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வெட்டு மற்றும் மின் அழுத்தக் குறைவு காரணமாக மக்கள் உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  குறிப்பாக முதியோரும், குழந்தைகளும் மின்வெட்டால் கடுமையான  பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டின்  மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது.  மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும்  தினமும்  300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை  ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும்  மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

கோடைக்காலத்தில் தமிழகத்தின் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கேற்ற வகையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திருக்க வேண்டும்.  ஆனால், இந்த அடிப்படைக் கடமையை செய்வதற்குக் கூட தமிழக அரசும், மின்சார வாரியமும் தவறி விட்டன.



தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச மின் தேவை 19693 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி வெறும் 4332 மெகாவாட் மட்டும் தான்.  தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது.  இதேநிலை நீடித்தால் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியாது.  தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்கதையாகவே நீடிக்கும்.

தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 2014&ஆம் ஆண்டுக்குப் பிறகு 5,700 மெகாவாட் மின்திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. இத்திட்டங்கள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், இவற்றில் 800 மெகாவாட் மின் திட்டம் மட்டுமே சில வாரங்களுக்கு முன் தொடங்கப்படட்து.  ஆனாலும், பல்வேறு காரணங்களால் அதிலும் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யபடவில்லை.

தமிழ்நாட்டில்  17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில்  செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க  தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government increase power generation Doctor Ramadoss


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->