தமிழ்நாட்டை கண்டுபிடித்தது திமுகவா? பித்தலாட்டத்துக்கு எதிரான உண்மை வரலாறு - அருள் ரத்தினம்! - Seithipunal
Seithipunal


பாமகவை சேர்ந்த அருள் ரத்தினம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழ்நாடு என்கிற நிலமும், தமிழர் என்கிற மக்களும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்கிறது. ஆட்சியாளர்கள் மாறலாம், ஆளும் முறைகள் மாறலாம், நிலத்தின் எல்லைகள் மாறலாம். ஆனால், தமிழ்நாடு பன்னெடுங்காலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை ‘திமுக தான் கண்டுபிடித்தது’ என்கிற ஒரு கட்டுக்கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

800 ஆண்டுகளுக்கு முன்பு வடதமிழ்நாட்டை ஆட்சி செய்த காடவராய கோப்பெருஞ்சிங்கன் தன்னை 'தமிழ் வாழப் பிறந்தவன்' என்று கூறிக்கொண்டார். திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு அவரை "தமிழ்நாடு காத்த பெருமாள்" என்கிறது.

900 ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பூரணார் தொல்காப்பிய உரை - உன்னுடைய நாடு எது என்று கேட்டால், 'தமிழ்நாடு' என்று சொல் – என்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரம் ‘கடலை எல்லையாகக் கொண்ட நிலம் தமிழ்நாடு’ என்கிறது.

ஆனால், திமுகவினரோ, ‘அறிஞர் அண்ணா 1967-இல் தீர்மானம் கொண்டுவந்த பின்னர்தான் தமிழ்நாடு வந்தது’ என்கிற கட்டுக்கதையை நிலைநாட்ட விரும்புகின்றனர்.

“ஆங்கிலேய, இந்திய தமிழ்நாடு”

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய பகுதிக்கு 1652ல் Madras Presidency என்று பெயரிட்டனர். 1947ல் விடுதலைக்கு பின்னர் இந்திய அரசு இதனை Madras Province என பெயர் மாற்றியது. 1950ல் இந்தியா குடியரசாக மாறிய போது மெட்ராஸ் ஸ்டேட் (Madras State) என்று பெயர் வைத்தனர்.

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்த தியாகி சங்கரலிங்க நாடார் 1956ஆம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்தார்.

பின்னர், அறிஞர் அண்ணா 1967 ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1969 ஜனவரி 14ல் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆக அதிகாரபூர்வமாக மாறியது.

இன்றைய எல்லைப்பரப்புடன் கூடிய தமிழ்நாடு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று உருவாக்கப்பட்டது. ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மொழிவாரி மாநிலங்கள் அப்போது உருவாகின. அதுதான் இன்றைய தமிழ்நாடு உருவான நாள் ஆகும். நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என அறிவித்து 25.10.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு உருவான 1956 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதால், அந்த வரலாற்றை மாற்றுவதற்காக அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த 1967 ஜூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக திமுகவினர் கொண்டாடுகின்றனர்.

விடுதலையடைந்த இந்தியாவில் 68 ஆண்டுகளாக (1956) தமிழ்நாடு எனும் மொழிவாரி மாநிலம் இருக்கிறது. ஆனால், அதனை 57 ஆண்டுகளாக (1967) குறைத்துக்காட்ட திமுகவினர் படாதபாடு படுகின்றனர்!

"தமிழ்நாடு: வரலாற்று ஆதரங்கள்”

தமிழ்நாடு என்கிற, இடம் சார்ந்த மொழி அடிப்படையிலான நாடு, கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆட்சியாளர்கள் மாறலாம், ஆளும் முறைகள் மாறலாம், நிலத்தின் எல்லைகள் மாறலாம். ஆனால், தமிழ்நாடு காலம்தோரும் இருக்கிறது. தமிழ் என்கிற மொழி வாழும் வரை, தமிழ்நாடு வாழவே செய்யும்.

தமிழ்நாட்டில் பல்லவர், சோழர், சேரர், பாண்டியர் என பலவாறாக நில எல்லையை பிரித்து ஆண்டாலும், காலம்தோறும் தமிழ்ப்பேசும் பகுதி தமிழ்நாடு என்கிற தேசமாகவே கருதப்பட்டது. இந்த பொதுநம்பிக்கையை பல்வேறு இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரத்தில் 'தமிழ்நாடு' தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது:

1. "கடலை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு"

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகு முழுமையும் இல்லை” 

பொருள்: சேரன் செங்குட்டுவன் 'கண்ணகிக்கு சிலை எடுக்க இமயமலைக்கு கல் எடுக்கப் போகும்போது அங்குள்ள மன்னர்கள் தடுப்பார்களே' என்பது குறித்து அமைச்சர்களிடம் கேட்கிறார். அதற்கு, "ஒலி எழுப்பும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்தை தமிழ்நாடாக ஆக்க விரும்பும் நீ இமயமலைக்கு கல் எடுக்கச் சென்றால் உன்னை எதிர்த்து நிற்க எவரும் வரமாட்டார்" என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள். (சிலப்பதிகாரம் - காட்சிக் காதை)

2. "இமயமலையில் முத்திரை பதித்த தமிழ்நாட்டு மன்னர்கள்"

"வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,"

பொருள்: வட ஆரிய மன்னர் ஒன்று கூடி பேசும் போது தமிழ் நாட்டை ஆளும் மன்னர்கள் முன்னொரு காலத்தில் இமயத்தில் வில், புலி, மீன் சின்னங்களை பொறித்தனர். அப்போது நம்மைப் போன்றவர் இல்லை போலும் என்று ஏளனமாக பேசிக் கொள்கின்றனர். (சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டம்)

இந்த சிலப்பதிகார பாடலில் 'வட ஆரியர்' என்பதற்கு எதிராக 'தென் தமிழ்நாடு' என்று முழு தமிழ்நாடும் குறிக்கப்பட்டுள்ளது. (சேரர், சோழர், பாண்டியர் ஆண்ட பகுதிகள் மாறுபட்டாலும், அவர்களை தமிழ்நாடு ஆளும் வேந்தர் என்று ஒரே நாடாக இப்பாடலில் குறிப்பிடப்படுவது கவனிக்கத் தக்கதாகும்)

3. "தமிழை இகழ்ந்தவர் மீது போர்"

"வாய்வாள்‌ ஆண்மையின்‌ வண்தமிழ்‌ இகழ்ந்த
காய்வேல்‌ தடக்கைக்‌ கனகனும்‌, விசயனும்"

பொருள்: வட ஆரிய மன்னர்களான கனகனும்‌, விசயனும் தமிழை இகழ்ந்தார்கள். தமிழை இகழ்ந்ததனால், இமயத்தில் கல் எடுத்து, அதனை வட ஆரிய மன்னர்கள் தலையில் சுமந்துவரச் செய்தான் என்கிறது சிலப்பதிகாரம். (சிலப்பதிகாரம் - கால்கோட்காதை)

4. "தமிழ்நாடு காண இறந்த பாண்டியன்"

"வடஆரியர்‌ படைகடந்து, 
தென்‌ தமிழ்நாடு ஒருங்குகாணப்‌
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் 
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்"

பொருள்: கண்ணகியால் உயிர்நீத்த பாண்டியன் நெடுஞ்சிழியன் வட ஆரிய படைகளை தோற்கடித்தவன், தமிழ்நாடு முழுவதும் காண இறந்தான் என்கிற சிலப்பதிகாரம். (சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்)

5. "நம் நாடு - தமிழ்நாடு"

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னர், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் என்பவர், 'கேள்வியும் அதற்கான பதிலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும்' என்பதற்கு எடுத்துக்காட்டாக பின்வருமாறு கூறுகிறார்.

“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“

(பொருள்: உன்னுடைய நாடு எது என்று கேட்டால், 'தமிழ்நாடு' என்று சொல்)

6. "தமிழ்நாடு காத்த காடவராயன்"

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே 'தமிழ் வாழப் பிறந்தவன்' என்று தன்னைக் கூறிக்கொண்ட காடவராய கோப்பெருஞ்சிங்கனின் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கல்வெட்டு அவரை "தமிழ்நாடு காத்த பெருமாள்" என்கிறது.

"திருநெடுந் தோப்பும் தீர்த்த மாகிய
அமுதநன் னதியும் அனைத்திலும் தூய
தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகமும்
வண்டிசை பாடும் அது மலர் வாசம்"

(தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகம் எனும் நீர்நிலையை திருவண்ணமலையில் அமைத்தவன்).

"செந்தமிழ் வாழப்பிறந்தவன் கோப்பெருஞ்சிங்கன்"- என்கிறது வந்தவாசி அருகே உள்ள வாயலூர் கல்வெட்டு.

வென்னிடாத போர்க் கன்னடர் வென்னிடப்
பொருததுன் பெருஞ்சேனை
விளங்கு செம்பொனி னம்பலக் கூத்துநீ
விரும்பிய தேவாரம்

பின்னி காவல அவனி நாராயண
பேணு செந்தமிழ் வாழப்பிறந்த
காடவகோப் பெருஞ்சிங்க நின்
பெருமை யார் புகழ்வாரேய்

(வெற்றிபெற முடியாத கன்னடரை வென்றவன், சிதம்பரம் நடராஜரை வழிபடுபவன், செந்தமிழ் வாழப்பிறந்தவன்).

"கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்" - என்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கல்வெட்டு.

குடதிசைக் கருநடர் தென்புலங் குறுகவும்
வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந் தழியவும்
போர்பல கடந்து பொருந்தா மன்னவர்

(குடகுமலை திசையில் உள்ள கருநாடகரின் தென்புலத்தை குறைத்தவன், வடதிசையில் உள்ள தெலுங்கரை அங்கேயே அழியச் செய்தவன்).

"அந்தக் காலத்திலேயே தமிழ்நாடு இருந்தது"

உலகின் மற்ற பகுதிகளில் தேசம் என்கிற கருத்தாக்கம் உருவாவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு உருவாகிவிட்டது. தமிழ்நாட்டின் எல்லையை குறிப்பிடும் போது நாடு, அகம், வரைப்பு, புலம், எல்லை உள்ளிட்ட சொற்களில் ஒரே பொருளில் குறிப்பிட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமாக கருதப்படும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பனம்பாரனார் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஆக மொத்தத்தில், சிலப்பதிகாரம் தொடங்கி, இந்திய விடுதலைக்கு பின்னர் இராமசாமி படையாட்சியார் தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சியை தொடங்கியது வரையிலான, இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாடு என்கிற வார்த்தை பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

ஆட்சியாளர்கள் மாறலாம், ஆளும் முறைகள் மாறலாம், நிலத்தின் எல்லைகள் மாறலாம். ஆனால், தமிழ்நாடு காலம்தோரும் இருக்கிறது. தமிழ் என்கிற மொழி வாழும் வரை, தமிழ்நாடு வாழவே செய்யும்.

எனவே திமுகவினர் தான் தமிழ்நாட்டை கண்டு பிடித்தார்கள் என்கிற கட்டுக்கதையை குப்பையில் வீச வேண்டும். அறிஞர் அண்ணா மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை மாற்றுவதற்கு முன்பாக பல நூற்றாண்டுகளாக தமிழ்நாடு இருந்தது - என்கிற வரலாற்று உண்மையை அனைவரும் உணர வேண்டும்

பின் இணைப்பு: 

1966-இல் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் எழுதிய "இலக்கியத்தில் தமிழ்நாடு" கட்டுரையில் காலம் காலமாக தமிழ்நாடு எனும் அடையாளத்தை குறிப்பிடும் இலக்கிய ஆதாரங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை கீழே காண்க:  

1. பரிபாடல்

"தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டக மெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த"
(பரிபாடல் - எட்டாம் பாடல்)

2. திருநாவுக்கரசு நாயனார் புராணம்

"தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்"
(பாட்டு - 289)

“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்”
(பாட்டு - 400)

"பொங்குதமிழ்த் திருநாடு" 
(பாட்டு - 410)

"தேம்பொழியும் செந்தமிழ் நாட்டினில்"
(பாட்டு - 412)

3. காரைக்காலம்மையார் புராணம்

"செந்தமிழ்த் திருநா டெய்தி"
(பாட்டு - 43)

4. திருஞானசம்பந்த மூர்த்திகள் புராணம்

"பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில் நீர்ப்பதிகள்"
(பாட்டு - 601)

"தண்தமிழ் நாட்டு மன்னன்"
(பாட்டு - 751)

5. சிறுதொண்டர்நாயனார் புராணம்

"வண்தமிழ் நாட்டுச் செங்காட்டங்குடி"

6. கம்பராமாயணம்

"தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம்" 
(நாடவிட்ட படலம் - 31)

7. ஒட்டக்கூத்தரின் மூவருலா

“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
(இராசராச சோழனுலா - 189)

8. தக்கயாகப் பரணி

"என்னுஞ்சமண் மூகருநான் மறையோ
ரேந்தமிழ் நாடெனும்"
(கோயிலைப் பாடியது - 76)

9. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

"தடம்பணை விரிந்த தமிழ்நாடு"
(சப்பாணிப் பருவம் - 4)

10. திருவிளையாடல் புராணம்

"பருங்கை மால்வரை பூழியன் பைந்தமிழ் நாட்டின்"
(இரசவாதஞ் செய்த படலம் - 2)

11. மகாகவி பாரதியார்

"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Day DMK vs PMK Arul Rathnam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->