கவர்னருக்கு எச்சரிக்கை விடுத்த தி.மு.க அரசு...நடந்தது என்ன?
tamilnadu government warning governer
'மாநில அரசுடன் மோதும் நிலைத் தொடர்ந்தால், தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை தான், தமிழகத்திலும் ஏற்படும்' என, கவர்னர் ரவிக்கு,தி.மு.க., அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 18ல் தமிழக கவர்னராக பொறுப்பேற்றார் ரவி. இன்னும் ஐந்து நாட்களில், தமிழக கவர்னராக ஓராண்டை நிறைவு செய்ய இருக்கும் ரவிக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே மோதல் நின்றபாடில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது, கவர்னருடனான மோதல் இயல்பான ஒன்று ஆகும்.
ஆனால், கவர்னர் ரவி, தி.மு.க.,வின் அடிப்படை கொள்கையை குறைகூறும் வகையில், அவ்வப்போது விமர்சனங்களை செய்து வருகிறார். இந்த நிகழ்வு தி.மு.க.,வுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்த தமிழக கவர்னர் ரவி, 'கிறிஸ்தவ மத போதகரான ஜி.யு.போப் தன் மொழிபெயர்ப்பில், ஒட்டுமொத்த திருக்குறளையும் ஆன்மிகமற்றதாக மாற்றியிருக்கிறார்.'தமிழறிஞர்களின் மொழிபெயர்ப்பால் தான் திருக்குறளில் உள்ள ஆன்மிகம் வெளிப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
திருக்குறளை ஆன்மிக நுால் என்பதன் மூலமாக, அதனை ஒரு கூட்டுக்குள் அடைக்க பார்க்கிறார்' என்று, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் விமர்சித்தது. இந்நிலையில், 'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் அளித்ததோடு தமிழக சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது என, தி.மு.க., அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே எதிர்மாறான நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், கவர்னர் ரவி மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, நேற்று தி.மு.க., நாளிதழில்அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், 'சிலந்தி' என்ற பெயரில், கவர்னருக்கு எதிரான கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாநில அரசு, 'தெலுங்கானா சட்டசபையில் உரையாற்றவும், குடியரசு தினத்தில் தேசியக் கொடியேற்றவும் அனுமதிக்கவில்லை. அரசுமுறைப் பயணங்களில் மரபுகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினர் திருவிழாவுக்கு செல்ல, ஹெலிகாப்டர் தர அரசு மறுத்து விட்டது' என்றெல்லாம் தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அவர் கொஞ்சும் அப்பிராணி. அதனால், சில செய்திகளை சூசகமாக சொல்ல வேண்டும் என்பதை அறியாமல், அப்பட்டமாக போட்டு உடைத்திருக்கிறார்.வரம்பை மீறி செயல்பட நினைக்கும் தமிழக கவர்னர் ரவி உள்ளிட்டோருக்கு, இதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்து விடலாம் என்ற, மத்திய அரசின் போக்கிற்கு, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
இரண்டு அதிகார மையங்களின் மோதலில் மக்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காக, மாநில அரசு விட்டு கொடுத்து போக நினைக்கலாம். ஆனால், மோதும் போக்கு அதிகமானால் அல்லது தொடர்ந்தால், கவர்னர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை, கவர்னர் ரவிக்கும் ஏற்படலாம். இதை அவர் உணர வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government warning governer