தமிழில் பேசு... தங்கக்காசு போட்டி : தமிழ் மாணவன் 'தமிழன்' வெற்றி! பரிசளித்து வாழ்த்திய மருத்துவர் இராமதாஸ்!
Thamizhil pesu Thanka Kasu Dr Ramadoss And PMK Program
தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘ தமிழில் பேசு... தங்கக் காசு’’ என்ற தலைப்பில் போட்டிமன்றம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிவித்திருந்தார்கள்.
அதன்படியான முதல் போட்டி தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மே 21 ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற்றது.
‘‘ தமிழில் பேசு... தங்கக் காசு’’ போட்டியில் பங்கேற்க மொத்தம் 17 பேர் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர்களின் 14 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்றும், போட்டியின் விதிகளை விளக்கியும் மருத்துவர் இராமதாசு அவர்கள் உரையாற்றினார்.
அன்னைத் தமிழ் மொழியின் இன்றைய நிலை குறித்தும், அன்னைத் தமிழைக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர் இராமதாசு அவர்கள் விளக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து போட்டி தொடங்கியது. தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான பாவலர் செயபாசுகரன், பா.ம.க. பொருளாளர் பாவலர் திலகபாமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றி பாடுவோருக்கு ரூ.1000 பரிசு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கானப் போட்டியில் இளையபெருமாள், கோவிந்தராசு ஆகிய இருவர் வெற்றி பெற்றனர்.
அதேபோல், பாரதியாரின் நாட்டுப்பண்களில் தமிழ் குறித்த பாடலில் இடம் பெற்றுள்ள,
’’ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! ’’ ஆகிய வரிகளை பிழையின்றி பாடுவோருக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தார்கள். இந்தப் போட்டியில் இளையபெருமாள், தமிழன், சொல்வேந்தன், நேரு ஆகிய நால்வர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கும், முந்தைய போட்டியில் வென்றவர்களுக்கும் மருத்துவர் இராமதாசு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து முதன்மௌப் போட்டி தொடங்கியது. 5 நிமிடங்கள் பிறமொழி கலப்பின்றி பேச வேண்டும் என்பது தான் போட்டிக்கான வரையறை ஆகும். போட்டியில் பங்கேற்ற 14 பேரும் முறையே 5 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார்கள்.
அவர்களில் ஐ.தமிழன் என்பவர் ஒரு சொல் கூட பிறமொழி கலப்பின்றி தனித்தமிழில் பேசினார். அவர் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ஐ.தமிழன் விழுப்புரம் மாவட்டம் குமளம் சிற்றூரைச் சேர்ந்தவர். கடலூரில் உள்ள பெரியார் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார். அவருக்கு மருத்துவர் இராமதாசு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், 4 குண்டுமணி ( அரை பவுன்) தங்கக் காசு பரிசு வழங்கினார்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிசாக மருத்துவர் இராமதாசு அவர்கள் எழுதிய ‘ எங்கே தமிழ்?’ என்ற நூல் வழங்கப்பட்டது.
அதில் ’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு! ’ என்ற பாரதிதாசனின் வரிகளை எழுதி மருத்துவர் இராமதாசு அவர்கள் கையெழுத்திட்டு வழங்கினார்கள்.
English Summary
Thamizhil pesu Thanka Kasu Dr Ramadoss And PMK Program