மாணவர்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் இஸ்ரோ தலைவர்..!
ISRO Chairman advises students
''கடின உழைப்பும், எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தாலே போதும், நாம் சாதிக்க முடியும்,'' இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பதவியேற்க்கவுள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் இன்று அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் பேசும்போது; இஸ்ரோ தலைவர் பதவி என்பது ஒரு முக்கியமான பொறுப்பு. பிரதமர் மோடி இந்த பொறுப்பை எனக்கு தந்துள்ளார். இந்த தருணத்தில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் வாழ்த்துகள், பாசம் ஒரு காரணம். நான் படித்தது ஒரு கிராமத்தில் தான். மாணவ, மாணவிகள் எந்த குடும்ப நிலையில் இருந்து படிக்க வருகிறோம், எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ஒரு மாணவர் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்றால் ஒரு நல்ல உள்ளம் வேண்டும். கடின உழைப்பு, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கை இருந்தாலே போதும், வளரும் போது தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், விண்வெளி ஆராய்ச்சியில் தொடக்கத்தில் ராக்கெட் என்றாலும் சரி, செயற்கைக் கோள் என்றாலும் சரி, நாம் மற்ற நாடுகளைத் தான் நம்பி இருந்தோம். இப்போது நாம் முன்னேறி விட்டோம். ஏராளமான செயற்கைக்கோள்கள் நம் ராக்கெட் வைத்து அனுப்பி இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரதமர் மோடி தொலைநோக்கு திட்டங்களை பற்றி சிந்திக்கும் தலைவராக உள்ளார். நிறைய திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார். சந்திரயான் 04 திட்டத்துக்கு அவர் அனுமதி அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 30,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் அமைக்க பிரதமர் ஒப்புதல் தந்துள்ளார் என்று அவர் நிருபர்களிடம் மேலும் கூறியுள்ளார்..
English Summary
ISRO Chairman advises students