சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர்- களமிறங்குவோம்..வெற்றி பெறுவோம் - டாக்டர் இராமதாஸ்!!
The battle to win social justice Let fight Lets win Dr Ramadoss
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர்- களமிறங்குவோம்.வெற்றி பெறுவோம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு மடல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிவுள்ளதாவது ,
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!
நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10&ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14&ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். உங்களில் ஒருவராக பல பத்தாண்டுகளாக களமாடி வரும் அவரைப் பற்றி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.
விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987&ஆம் ஆண்டு செப்டம்பர் 17&ஆம் நாள் அதிகாலை 12.01 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாத காவல்துறை, சாலை மறியல் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும், என்னுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினரையும் கைது செய்து விட்டு, மனித வேட்டையை தொடங்கியது.
பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது. அப்போதும் கொலைப்பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.
இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17&ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13&ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019&ஆம் ஆண்டு அக்டோபர் 21&ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7&ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகி விட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது, தாங்களாக முன்வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து விவாதத்தின் போது நான் விடுத்த சவாலில் வெற்றி பெறும் வகையில், 2020&ஆம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50% இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.
வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், அதைக் கூட நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியாவது உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்ய மனமில்லாதவர் தான் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழித்து தான் 2023 ஜனவரி 12&ஆம் நாள் வன்னியர் உள் இடஓதுக்கீடு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டார். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 3 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. காரணம்... வன்னியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருப்பது வன்மம் தானே தவிர, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல.
வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்வது இது முதல் முறையல்ல. 1970&ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையில், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது வன்னியர்களுக்கு மட்டும் 15%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்த மறுத்தது அப்போதைய முதலமைச்சர் கலைஞர்.
1989&ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுனர் ஆட்சியில் 12.12.1988&ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக வன்னியர்களுக்கு 16% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் 107 சாதிகளுடன் வன்னியர்களையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்து அடித்துக் கொள்ள வைத்தார் கலைஞர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மூன்று முறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த மூன்று வாய்ப்புகளையும் சீர்குலைத்தது திமுக அரசுகள் தான். தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கே துரோகம் செய்த கட்சி தான் திமுக. ஏ.ஜி. என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கூட திமுகவுக்கு மனம் இல்லை. 2019&ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு ஈகியர்கள் 21 பேருக்கு நினைவு மண்டபம் கட்டும் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.
திமுகவின் வன்னியர் துரோகம் இத்துடன் நின்று விடவில்லை. திமுகவிலும் வன்னியர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலும், பின்னர் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுகவில் கோலோச்சிய செஞ்சி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் ஆகியோர் திமுகவில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்களுக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட திமுகவுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு திமுக இழைத்து வரும் துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுப் போராளிகளின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் துரோகத்திற்கு கணக்குத் தீர்ப்பதற்குமான களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். எத்தனை, எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் திமுக தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் நமது வலிமை அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.
English Summary
The battle to win social justice Let fight Lets win Dr Ramadoss