பரந்தூர் என்ன பாகிஸ்தானா? 2009 போல போலீஸ் ஆட்சி! இதற்கான எதிர்வினைகளை தேர்தலில் எதிரொளிக்கும் - எச்சரிக்கும் திருமுருகன் காந்தி!
thirumurugan Gandhi DMK MK STalin TN Police TVK Vijay Parandur
மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பரந்தூர் என்ன பாகிஸ்தானா? அங்கே செல்வதற்கும், நம் தமிழ் மக்களை சந்திப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்க திமுக காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது.
எத்தனைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எவ்வளவு முறை மூச்சுவிடலாம், எத்தனை டம்ப்ளர் தண்ணீர் குடிக்கலாம், எத்தனைபேர் அமரலாம், எத்தனை பேர் நிற்கலாம், எத்தனை வார்த்தைகளை பேசலாம், பரந்தூருக்கு போவதற்கு முன் என்ன சாப்பிடலாம், காலைக்கடன்களை கழிக்கலாமா கூடாதா என ஏகப்பட்ட விடயங்களை ஆழமாக காவல்துறை அதிகாரிகள் யோசிப்பார்கள் போல. இத்தனை முன்னெச்சரிக்கையாக சிந்திக்கும் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ்தான் தோழர் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது, வேங்கைவயல் குற்றவாளி தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான்.
மே17 இயக்கம் பரந்தூர் அருகே செல்வதற்குகூட அனுமதியில்லை. அதேசமயம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கு கழுத்துவரை கட்டுப்பாடுகளுடன் அனுமதி.
போராட்டத்தை தடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு அரசியல் சாசனம் கொடுக்கவில்லை. போராட்டம் நடத்த, எதிர்ப்பை தெரிவிக்க, போராடும் மக்களை ஆதரிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமையுண்டு. அரசியல் சாசனம் கொடுத்த உரிமைகளை மறுப்பது சட்டவிரோதம். நீதிமன்றங்கள் இந்த அடக்குமுறையை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது இந்த மனித உரிமை மீறலை, அரசியல்சாசன விரோதத்தை திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து செய்கிறது.
ஒன்றுகூடும் உரிமை, அமைதியான வழியில் கருத்தை தெரிவிக்கும் உரிமை, அரசின் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் உரிமை என அனைத்தும் அடிப்படை மனித உரிமை விதிகளுக்குள் வருகிறது. இந்த உரிமை மறுக்கப்படுமெனில் நடபது சர்வாதிகார ஆட்சி என்றே அழைக்கப்படும்.
சமூக செயற்பாட்டாளர்கள் இனிமேலும் ஒன்றாக கைகோர்க்கவில்லையெனில் போலீஸ் மாநிலமாக மாறியிருக்கும் தமிழ்நாடென்பது அடிப்படையுரிமையற்ற காசுமீராக மாற்றப்படலாம். பரந்தூர் மக்களின் சமரசமற்ற போராட்டம் ஒருநாள் வெல்லும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் மற்றும் ஒரு செய்திக்குறிப்பில், "சென்னையில் அச்சு அடிப்பதற்கு வித்தியாசமான கட்டுப்பாடுகளை காவல்துறை போட்டுள்ளதாக அச்சகத்தார் சொல்கிறார்கள். 'ஆரிய கைக்கூலி', 'தமிழர் எதிரி' ஆகிய வார்த்தைகள் இருந்தால் அச்சடிக்கக் கூடாதாம். இதுபோல 100 வார்த்தைகளை காவல்துறை போட்டுள்ளதால சொல்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் 14 பேர் வேலை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது.
போராட்டங்களிலிருந்து, பொதுக்கூட்டம், பொங்கல்விழா, அரங்கக்கூட்டம் என ஆரம்பித்து யார் கடைகளை நடத்தலாம், எப்போது மூடவேண்டும், எதை அச்சடிக்க வேண்டும், எதை அச்சடிக்கக்கூடாது, 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே நிற்கலாமா கூடாதா, கூட்டமாக நண்பர்களுடன் பேசலாமா என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல்துறை.
தமிழ்நாட்டில் காவல்துறை நடத்தும் கட்டுப்பாடுகள் ஆங்கிலேயர் ஆட்சியை விட மிக மோசமான அடக்குமுறைகள். இதையெல்லாம் நெறிப்படுத்தும் சிந்தனையோ, அரசியல் உணர்வோ, சனநாயக கருத்துரிமை அணுகுமுறையோ இல்லாமல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் திமுக அரசு இருக்கிறது. மிக மேலோட்டமான நலத்திட்டங்களை அறிவித்துவிட்டாலே மக்கள் நன்மதிப்பை பெற்று வாக்குவாங்கிவிடலாம் எனும் கற்பனை உலகில் உள்ளனர் திமுகவினர்.
ஆனால், விடுதலை உணர்விற்காகவும், அடிமைத்தனத்திற்கு எதிராகவும் தான் உலகெங்கும் மக்கள் ஆட்சிகளை, ஆட்சியாளர்களை மாற்றியுள்ளனர். நலத்திட்டங்களை அறிவிப்பதற்கு திராவிட மாடல் என பெயர் வைத்துவிட முடியாது. அண்ணாசாலையில் ' ஹாப்பி சண்டே' நடத்தினால் நாடு மகிழ்ச்சியாக உள்ளதென கற்பனை செய்வது ஆகச்சிறந்த நகைச்சுவை.
'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' எனும் பிரஞ்சு புரட்சியின் முழக்கங்களே மானுடகுலத்தில் குடியரசு சிந்தனைகளை முன்னகர்த்தியதெனும் வரலாறை மறந்து வெகுநாட்களாகிறது. 2009ல் இதே போன்றதொரு போலீஸ் ஆட்சியை நடத்தி தமிழ்நாட்டில் நடந்த எழுச்சிகளை மட்டுப்படுத்தலாம் என முயற்சித்தது 10 ஆண்டுகள் திமுகவை தனிமைப்படுத்தியது. அந்த அரசியல்பாடத்தை என்றுமே திமுக கற்றுக்கொள்ளாதென்பதைமீண்டும் சொல்கிறது இக்கட்டுப்பாடுகள்.
முதல்வர் அவர்களே, காவல்துறைக்கு மக்கள் ஓட்டு போடவில்லை என்பதை நினைவுபடுத்துகிறோம். அடுத்த தேர்தலுக்கு காவல்துறை அதிகாரிகள் உங்களுக்காக ஓட்டுகேட்டு வீதிக்கு வரப்போவதுமில்லை. கருத்துரிமைக்கு எதிரான இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து தோழர் ஹென்றிடிபென், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.பாலகிருஷ்ணன், தற்போதைய தலைவர் தோழர் சண்முகம் கவனப்படுத்துகின்றனர். தோழர் வேல்முருகன் இதுகுறித்து வெளிப்படையாக பேசியும் வருகிறார். இதை எத்தனைக்காலம் உதாசீனப்படுத்தும் திமுக? இதற்கான எதிர்வினைகளை தேர்தலில் எதிரொளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thirumurugan Gandhi DMK MK STalin TN Police TVK Vijay Parandur