திருத்தணி சாலை விபத்து; முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு; எடப்பாடி பழனிச்சாமி வருத்தம்..! - Seithipunal
Seithipunal


திருத்தணியில் இன்று பிற்பகல் நடந்த சாலை விபத்தில் 05 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;  'திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பீரகுப்பம் மதுரா கே.ஜி.கண்டிகை கிராமத்தில் இன்று பிற்பகல் 03.30 மணியளவில் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியும், ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 60) த/பெ. சுப்பிரமணி, சிவானந்தம் (வயது 53) த/பெ.சண்முகம், மகேஷ் (வயது 40) த/பெ.கண்ணியப்பன் மற்றும் முரளி (வயது 38) த/பெ.பெரியசாமி ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 28 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்து, தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது;  'திருத்தணி அருகே அரசுப் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruthani road accident Chief Minister announces financial assistance and Edappadi Palaniswami expresses grief


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->