விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - மும்முனை போட்டி ஆரம்பம்.!
three way contest in vikravandi by election
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி உயிரிழந்ததைத்தொடர்ந்து, அதே மாதம் 8-ந் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலை போலவே நான்கு முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, தி.மு.க., அ.தி. மு.க., பாஜக தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. கூட்டணி சார்பில், அக்கட்சி வேட்பாளராக அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதனால், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வின் நிலை என்ன? என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தே.மு.தி.க. வும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது.
English Summary
three way contest in vikravandi by election