கடும் எதிர்ப்பு.."தொ.மு.ச உட்பட 9 அமைப்புகள்" முதல்வருக்கு கடிதம்.. தமிழக அரசுக்கு நெருக்கடி..!!
TNSTC Unions letter to CM Stalin protesting private buses in Chennai
தனியார் பங்களிப்புடன் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 500 பேருந்துகளும், 2024-2025 நிதி ஆண்டில் மேலும் 500 பேருந்துகளும் என மொத்தம் 1000 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பும் சி.ஐ.டி.யு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் 1000 பேருந்துகளை கிராஸ் காஸ்ட் முறையில் இயக்கலாம் என்று உலக வங்கி பரிந்துரை அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஆலோசகர்கள் குழு நியமிப்பதற்கான ஒப்பந்த புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கு மட்டும்தான். அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்தான சாதக பாதங்களை ஆய்வு செய்து அவர்கள் தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.
அதன் அடிப்படையில் அரசு முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொள்ளும். ஏதோ நாளையே தனியார் பேருந்துகள் இயக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அரசு வழித்தடத்தில் இயங்கப்படும் பேருந்துகள் ஒருபோதும் நிறுத்தப்படாது. அதே போன்று அதில் பணிபுரியும் பணியாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உட்பட 9 தொழிற்சங்கங்களும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன. அதில் தனியார் பங்களிப்புடன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கும் திட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தனியார் பேருந்துகள் இயங்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
English Summary
TNSTC Unions letter to CM Stalin protesting private buses in Chennai