பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய மனு இன்று விசாரணை.!!
today chennai highcourt investigation for seeking supply sugarcane in pongal gift package
கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அரிசி, சர்க்கரை, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை வழங்கினார். அதன் படி, இந்த தொகுப்பு ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தது.
அந்தவகையில், தமிழக அரசு, கடந்த 22-ந்தேதி அன்று இந்த வருடத்திற்கான பொங்கல் தொகுப்பை அறிவித்தது. அந்த தொகுப்பில் ஆயிரம் ரூபாய் பணம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று வெளியானது.
இந்த பரிசுத் தொகுப்பு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, விவசாயிகளிடம் இருந்து நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டுள்ளோம்.
ஆனால், பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டி கடந்த 24-ந்தேதி தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
today chennai highcourt investigation for seeking supply sugarcane in pongal gift package