கோவை : கணவரை மீட்டுத் தர கோரி கண்ணீர் மல்க புகார் அளித்த திருநங்கை.!
transgender petition to coimbatore commissionar office
கணவரை மீட்டுத் தர கோரி கண்ணீர் மல்க புகார் அளித்த திருநங்கை.!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாளவிகா. திருநங்கையான இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
"என்ஜினீயரிங் படித்த பட்டதாரியான நான் சென்னிமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்த போது புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் நாங்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தோம். அதன்படி, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோயிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்துக்கொண்டோம் . அதன் பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தோம்.
இந்த நிலையில் எனது கணவரின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீஸார் விசாரணை நடத்தி நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து எங்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் மீண்டும் வரவில்லை. எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்றுக் கூடத் தெரியவில்லை. ஆகவே, எனது காதல் கணவரை மீட்டு தர வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
transgender petition to coimbatore commissionar office