சென்னை-நாகப்பட்டினம்: நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி! கருகிய சிமெண்ட் மூட்டைகள்!
truck suddenly caught fire the road Burnt cement bags
கடலூர், பெண்ணாடத்தில் இருந்து புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு லாரி ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு சென்றது. இந்த லாரியை ஓட்டுனர் பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றார்.
லாரி பெரியகாட்டு பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியின் பின்புறத்தில் தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனைப் பார்த்த ஓட்டுநர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்து லாரியை நடுவழியிலேயே நிறுத்தி விட்டு இறங்கினார். பின்னர் லாரி முழுவதும் தீ வேகமாக பரவி எரிய தொடங்கியது.
சிறிது நேரத்திலேயே டீசல் டேங்க் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த லாரியை நீண்ட நேரம் போராடி முழுமையாக அணைத்தனர்.
இருப்பினும் லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. சென்னை-நாகப்பட்டினம் சாலையில் தொடர் போக்குவரத்து இருந்து வரும் நிலையில் நடு ரோட்டில் லாரி எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியில் தீ பற்றியதற்கான காரணம் என்ன, என விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
truck suddenly caught fire the road Burnt cement bags