அவர் வீட்டு பெண்கள் கோவில் கோவிலாக வலம் வருகின்றனர் - எகிறி அடிக்கும் டிடிவி தினகரன்!
TTV Dhinakaran Reply for Udhayanithi sanatana speech
திமுக அமைச்சர் உதயநிதிக்கு சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல், விளையாட்டுத்தனமாக பேசிய உள்ளதாகவும், மத உணர்வுகள் குறித்து அவர் பேசியது தவறு என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "உதயநிதி ஸ்டாலின் மத உணர்வுகளை பற்றி பேசியது தவறு.
அதே சமயத்தில் அவருடைய தலைக்கு விலை பேசியது அதைவிட காட்டுமிராண்டித்தனம். உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனம் என்றால் என்ன என்று கூட தெரியாது.
அவர் இதனை இது பற்றி விளையாட்டாக பேசி விட்டார். இந்து மதம், இந்து கோவில், கடவுள் மற்றும் சமஸ்கிருதம் குறித்து உதயநிதியின் தாத்தா கருணாநிதியும், உதயநிதியின் தந்தை மு.க ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே இழிவாக பேசியுள்ளனர்.
ஆனால் அவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் கோவில்களை சுற்றி வருவதையே வாடிக்கையாக கொண்டு உள்ளனர். அங்க பிரதட்சணம் செய்வதும், புரோகிதர்கள், அர்ச்சகர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களது காலில் விழுந்து மரியாதை செய்வதுமாக அவர்களின் வீட்டுப் பெண்கள் உள்ளனர்.
உள்ளொன்றும், வெளி ஒன்றும் வைத்து வேஷம் போடுவதைப் போல, அரசியலிலும் அவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உதயநிதி விளையாட்டு பிள்ளை போல பேசி உள்ளார். அவரின் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அரசியல் நாகரீகம் தெரியாமல், தேவையில்லாமல் மதங்கள் குறித்து, மத உணர்வுகள் குறித்து பேசுவது தவறு என்பது கூட உதயநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
English Summary
TTV Dhinakaran Reply for Udhayanithi sanatana speech